மியன்மாரில் குடியமர்ந்தது ரோஹிங்யா முஸ்லிம் குடும்பம்!!

ரோஹிங்ய மக்கள் மியன்மாருக்கு மீளத் திரும்புவதற்கான பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், கொடுரமான இராணுவ நடவடிக் கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற சுமார் ஏழு இலட்சம் அகதிகளுள் முதலாவது குடும்பம் மியன்மாருக்கு வந்து சேர்ந்துள்ளது என்று மியன்மார் அரசு
அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் வடக்கு ரக்கைன் மாநிலத்தில் மியன்மார் இராணுவம் மேற்கொண்ட கொடூரத் தாக்குதல் காரணமாக நாடற்ற முஸ்லிம் சிறுபான் மையினர் அழுக்கு நிறைந்த மிக மோசமான சூழலுள்ள பங்களாதேஷ் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்,

மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு மேற்கொள்ளப் படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதிலும், அதனை மறுத்துள்ள மியன்மார் அரசு ரோஹிங்ய ஆயுததாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தள்ளது.

பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையே மீள திருப்பியனுப்புதலுக்கான உடன்பாடு கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட போதிலும் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடவில்லை என்று இரு நாடுகளும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன,

ரோஹிங்ய அகதிகள் குடும்பமொன்று மீளத் திரும்பியுள்ளதாக மியன்மார் தெரிவித்தது. ரக்கைன் மாநிலத்திலுள்ள ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட ரோஹிங்ய குடும்பமொன்று ரக்கைன் மாநிலத்தின் தெளங் பியோலேடவெயி நகரத்தில் அமைந்துள்ள அகதி முகாமுக்கு இன்று வந்து சேர்ந்தாக மியன்மார் அரச தகவல் குழுவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட
அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.