அரசியல் கைதிகளின் கோரிக்கையை பிரதமரிடம் கொண்டு செல்வேன்! – சுமந்திரன் உறுதி

குறுகியகால புனர்வாழ்வு வழங்கி தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்துவேன். இன்று அல்லது நாளை இந்தச் சந்திப்பு இடம் பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின ரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். தாம் 9 ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கருத்தில் கொண்டு, குறுகியகால புனர்வாழ்வையாவது வழங்கி விடுவிக்குமாறு கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனும் சென்றிருந்தார்.

அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமரிடம் இன்று அல்லது நாளை தெரியப்படுத்துவேன். அவர்கள் 9 ஆண்டுகாலம் தடுத்து வைக்கப்பட்டதையும் கவனத்தில் எடுத்து குறுகியகால புனர்வாழ்வுடன் விடுதலை செய்வது தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல் நிலமையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!