அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் கோத்தா பாதுகாப்புக் கோரலாம் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தால், அவருக்கு அரசாங்கம், காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல, சிறிலங்கா காவல்துறை அதிகாரி நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கூட்டு எதிரணியினர் பிரச்சினை எழுப்பினர்.

இதனால் நாடாளுமன்றத்தில் வாக்குவாதங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன.

இதன்போது பதிலளித்துப் பேசிய சிறிலங்கா பிரதமர், ”தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச கருதுவாரேயானால், அவர் பாதுகாப்பைக் கோர முடியும்.

கூட்டு எதிரணியில் பிளவு இருப்பதால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தை அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்த வேண்டாம்.

பொதுவேட்பாளராக போட்டியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அகற்றப்பட்ட போது அமைதியாக இருந்த கூட்டு எதிரணியில் உள்ளவர்கள், இப்போது அவரது பாதுகாப்புக் குறித்து கரிசனைப்படுவது ஆச்சரியம் தருகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபரும் நானும் உத்தரவிட்டுள்ளோம். விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது எந்த தகவல்களையும் வெளியிட முடியாது.

விசாரணைகளின் முடிவில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எமக்கு அறியத்தருவார்கள்” என்று குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!