அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவைக் கைது செய்வதற்கு அரசாங்கம் இடமளியாது! – மஹிந்த சமரசிங்க

பாதுகாப்பு படையணி பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவைக் கைது செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்கூட்டியே அறிவிக்காமை அமைச்சரவையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியான அட்மிரல் விஜேகுணரட்ன மீது போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில், அவரை கைது செய்ய அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி உறுதிபட அறிவித்துள்ளமைக்கு அமைச்சரவை ஏகமனதாக இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய அனைத்து விடயங்களையும் போல இதனை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சரவை உறுதியாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் ஜனாதிபதியே படைகளின் தலைவரென அரசியலமைப்பு கூறுகின்றது. படைத் தலைவருக்கடுத்தபடியாக இரண்டாவது முக்கிய இடத்தைப் பாதுகாப்பு படையணியின் பிரதானி​ வகிக்கின்றார். சி.ஐ.டியால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவர், கைது செய்யப்படவுள்ளமை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் வரை தான் அறிந்திருக்கவில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். பிரதமருக்கும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு படையணியின் பிர தானி கைது செய்யப்படவுள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியப்படுத்தாததன் பின்னணி என்ன? என்ற கேள்வி அமைச்சரவை அமைச்சர்களிடையே எழுந்துள்ளது.

பாதுகாப்பு படையணி பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, சி.ஐ.டி விசாரணை உள்ள நிலையில் ஜனாதிபதியின் அனுமதியுடன் நாட்டை விட்டுச் சென்றிருப்பதாக சுமந்திரன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். அவர் நாட்டை விட்டுத் தப்பிப் போகவில்லை. உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதியின் அனுமதியுடனேயே மெக்ஸிக்கோ சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்பி வருவார்.

பாதுகாப்பு படையணி பிரதானி விஜேகுணரட்ன கைது செய்யப்படவுள்ளமை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படாத நிலையில், அவர் மெக்ஸிக்கோ சென்றிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் முகமாகவே ஜனாதிபதி கடந்த வியாழக்கிழமை அவசர அமைச்சரவையொன்றை கூட்டியிருந்தார்.

இதன்போது போதுமான சாட்சியங்கள் மற்றும் வழக்கு இல்லாமல் நாட்டுக்காக உழைத்த படையதிகாரிகளை கைது செய்து விளக்கமறியலில் வைத்திருப்பது அர்த்தமற்றதென்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.பயங்கரவாதத்தை அழித்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றிய படை வீரர்கள் இன்றும் மக்கள் மனதில் கெளரவத்துக்குரிய இடத்தில் இருக்கிறார்கள்.

யுத்தத்தின்போது தமது சட்ட வரைபுக்கு வெளியே சென்று குரோதத்தை வெளிப்படுத்தியமைக்கு சாட்சியங்கள் இருப்பின் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் போதுமான சாட்சியங்கள் இல்லாதவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்து காலத்தை இழுத்தடிப்பது அர்த்தமற்றதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!