நடுவானில் வெடித்துச் சிதறிய விமான என்ஜின் – ஜன்னல் உடைந்து காயமடைந்த பெண் பயணி உயிரிழப்பு

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜின் வெடித்து சிதறி ஜன்னல் உடைந்ததால் வெளியே தள்ளப்பட்டு பலத்த காயமடைந்த பெண் பயணி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து நேற்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் டல்லாஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தது. விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென வெடித்துச் சிதறியது. அதிவேகமாக பாய்ந்து வந்த அதன் பாகங்கள் விமானத்தின் ஒரு ஜன்னல் கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த ஜெனிபர் ரியோர்டாம் என்ற பெண்ணின் தலை, அதிக அழுத்தம் காரணமாக ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டது. அதன்பின்னர் அவரது உடலும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தள்ளப்பட்டது. பறந்து வந்த உலோகத் துண்டு அவரை தாக்கியது. உடனே சக பயணிகள் கடுமையாக முயற்சி செய்து அந்த பெண்ணை உள்ளே இழுத்து, ஜன்னல் ஓட்டையை அடைத்தனர்.

உயிரைப் பயணம் ஜெனிபர் ரியோர்டாமை காப்பாற்றினர். எனினும் உலோகத் துண்டு தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். மேலும் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதேபோல் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது.

இதற்கிடையே, என்ஜின் செயலிழந்ததால் பிலடெல்பியா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்த ஜெனிபர், வெல்ஸ் பார்கோ வங்கியின் மக்கள் தொடர்பு துறையின் துணை தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!