இன பாகுபாடு எதிரொலி- 8000 கடைகளை மூடிவிட்டு ஊழியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது ஸ்டார்பக்ஸ்

அமெரிக்காவில் உள்ள பிரபல ஸ்டார்பக்ஸ் துரித உணவகத்தில் கருப்பு இனத்தவர்கள் மோசமாக நடத்தப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் 8 ஆயிரம் கடைகளை ஒருநாள் மூடிவிட்டு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க உள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதன் கிளைகள் உலகம் முழுவதும் பரவிக்காணப்படுகின்றன. அமெரிக்காவில் மட்டும் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடையில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் கருப்பு இனத்தைச் சேர்ந்த இருவர் ஸ்டாட்பக்ஸ் காபி கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் காபி ஆர்டர் செய்யாமல் தனது நண்பருக்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் கழிவறைக்குள் செல்ல முயன்ற போது அவரை உள்ளே செல்லக்கூடாது என ஒருவர் தடுத்துள்ளார். இது குறித்து கடை மேலாளரிடம் புகார் அளித்த போது அவர் கருப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள் செல்லக்கூடாது என கூறினார். இதனால் கடைக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த தவறும் செய்யாத இருவரை கருப்பாக இருப்பதால் மோசமாக நடத்துவது கண்டனத்திற்கு உரியது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நடந்த சம்பவத்திற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து வெளியிட்ட டுவிட்டில், ‘கடந்த வியாழக்கிழமை எங்கள் கடையில் நடைபெற்ற சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட இருவரிடமும், வாடிக்கையாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், ஊழியர்கள் ஒருதலை பட்சமாக நடந்துள்ளனர். இதனால் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்களுக்கு பாகுபாட்டை தவிர்த்தல், வாடிக்கையாளர்களை சமமாகவும், மரியாதையாகவும் நடத்துவது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக அமெரிக்காவில் உள்ள 8 ஆயிரம் கடைகள் மே மாதம் 29-ம் தேதி மூடப்படும்’ என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!