காற்றழுத்தத்தால் காது, மூக்கில் ரத்தம் கசிவு- ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்கும் விமான பயணி

விமானத்தில் காற்றழுத்தத்தால் அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என கூறியுள்ளார்.

மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

விமானம் வானில் பறக்கும் போது, விமானத்துக்குள் காற்றழுத்தத்தை சீராக வைத்திருப்பதற்கு இரு பொத்தான்கள் உண்டு. அந்த பொத்தான்களை பைலட்டுகள் இயக்காமல் விட்டதே பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட காரணம் என்று தெரிய வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் சுமார் 30 பயணிகளின் காது, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களுக்கு விமான பணிப்பெண்கள் மாஸ்க் கொடுத்தனர். என்றாலும் பெரும்பாலான பயணிகள் தலைவலி, ரத்த கசிவால் கடுமையாக துடித்தனர்.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பை திரும்பி வந்தது. பயணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ரத்தக் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அன்கூர் கலா, அன்வே ‌ஷன்ராய், முகேஷ் சர்மா, விகாஸ் அகர்வால், தாமோ தர்தாஸ் ஆகிய 5 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு விமான பயணம் செய்யக் கூடாது என்று டாக்டர்கள் அவர்களிடம் அறிவுறுத்தி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்தனர்.

இந்த நிலையில் காது – மூக்கில் இருந்து அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி கலா, ஜெட் ஏர்வேஸ் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் கடும் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த விமானத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மந்திரி சுரேஷ்பிரபுவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!