யாழ். விமான நிலையத்தின் மீது கண்வைக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விரைவில் விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்தமாதம் 17ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, வரும் திங்கட்கிழமை தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக தெரிவித்துள்ளார்.

“அடுத்த ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும் என்று நம்புகிறோம்.

இதற்காக, சிறிய விமானங்களை குத்தகைக்குப் பெறுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சில நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் போது, யாழ்ப்பாணத்தின் ஊடாக சேவையை நடத்தும் திட்டமும் உள்ளது.

இது கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கும் இடையே நல்ல இணைப்பை ஏற்படுத்தும்.

யாழ்ப்பாணத்தில் ஒரு அனைத்துலக விமான நிலையத்தைத் திறப்பது இப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானங்களை இயக்குவதன் மூலம், இந்த முயற்சிகளுக்கு உதவ முடியும்.

எனினும், எங்களிடம் தற்போது, யாழ்ப்பாணத்துக்கு இயக்கக் கூடிய விமானங்கள் இல்லை.

அடுத்த ஆண்டு இந்த சேவையைத் தொடங்குவதற்குப் பொருத்தமான விமானத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு முற்படுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!