வடக்கு கடலில் கண்காணிப்பு தீவிரம்!

வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கடற்படையின் வடக்கு கட்டளைத் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதியில் இருந்து மேலதிக கடற்படைக் கப்பல்கள், படகுகளுடன் கடற்படையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர் என்றும் சந்தேகத்துக்குரிய படகுகளை சோதனையிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்அகதிகள் மூலமாகவும், போதைப்பொருள் கடத்தல்கார்ர்கள் மூலமாகவும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே கடலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் தகவல்கள் கூறுகின்றன.

கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தியாவில் உள்ள பெருமளவான தமிழர்கள் படகு மூலம் இலங்கை வருவதற்கு தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவர்களிடம் 3000 தொடக்கம் 4000 வரையான இந்தியா ரூபாவைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு கடத்தி வருவதற்கு இந்திய மீனவர்கள் தயாராக இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்தியாவில் இருந்து வருவோரைத் தடுப்பதற்காக கடற்படையினர் வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!