குருந்தூர் மலைக்கு செல்லும் சுமந்திரன்!

முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலைக்கு செல்ல தடையேதும் இல்லை என உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்க இன்று குருந்தூர் மலைக்கு செல்லவுள்ளதாகவும் தடுத்தால் எதிர்கொள்வோம் எனவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன், முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
    
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
“மக்கள் உணவில்லாமல் பட்டினியை எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்திலே கடந்த சில நாட்களாக கொழும்பிலே ஜெட் விமானங்கள் பறந்து திரிந்து நாளைய அணிவகுப்பிற்கு எண்ணெயை விரையமாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்று விமர்சையாக சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றார்கள்.

திட்டமிட்ட நேரடியான சிங்கள குடியேற்றங்களுக்கு மேலதிகமாக இப்படியான ஒரு செயல்முறையினையும் அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது. இப்பொழுது தொல்லியல் திணைக்களம் இதிலே ஈடுபடுகின்ற போது புத்த சமயத்தை ஒட்டிய சின்னங்களை கண்டுபிடிப்பதாக பல இடங்களிலே வடக்கிலும் கிழக்கிலும் பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். அதன் பிரதிபலனாக எங்களுடைய மக்கள் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை இழந்து நிற்கின்றார்கள். பல இடங்களில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

வெடுக்குநாறி மலையிலே அவ்வாறன ஒரு சம்பவம் இடம்பெற்றது. குருந்தூர் மலையிலே ஒரு வருடத்திற்கு முன்னர் நீண்டகாலமாக வழிபட்டுவந்த இடத்திலே எங்கள் மக்கள் வழிபடாமல் தடுக்கப்படடுள்ளனர். ஆகவே நாளைய தினம் எங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றது. நாங்கள் சுதந்திரம் இல்லாத நாடடிலே வாழ்கின்றோம் என்பதை பெப்ரவரி 04 ஆம் திகதியே உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற ஒரு நடவடிக்கையாக குருந்தூர் மலைக்கு அதிகாலையிலே செல்லவிருக்கின்றோம்.

இது சம்மந்தமாக ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்திலே நிலுவையிலே இருக்கின்றது. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இவர்கள் மூவரும் இதிலே மனுதாரர்களாக இருக்கிறார்கள் நான் அந்த வழக்கிலே ஆயராகின்றேன். அந்த வழக்கிலே பிரதிவாதியாக குறிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்திலே வந்து நாங்கள் அங்கே செல்வதற்கு தடையேதும் இல்லை என்று கூறியிருக்கின்றார்கள். ஆகையினாலே தடையேதும் இல்லையென்றால் நாங்கள் நாளை அங்கே செல்லவிருக்கின்றோம். செல்லுவதை யாராவது தடத்தால் அதை அந்த நேரத்திலே நாங்கள் எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!