இந்தியாவின் மிகப்பெரிய திருடன் கைது!

இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த 27 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடி முக்கி நகரங்களில் சொத்துகள் வாங்கி குவித்து 3 மனைவி, 7 பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ‘பலே’ திருடனை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ”பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பது பழமொழி. இந்நிலையில் தான் இந்தியா முழுவதும் திருட்டு மற்றும் ஆயுதம் கடத்தலில் ஈடுபட்டு வந்த ‘பலே’ திருடனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் சமீப காலமாக ஆயுதம் கடத்தும் கும்பல் சுற்றி திரிவாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருடன் கைது
இந்நிலையில் தான் ஆயுதம், கஞ்சா கடத்தல் மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக டெல்லி தேஷ் பந்து குப்தா சாலை அருகே அனில் சவுகான் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

5 ஆயிரம் கார் திருட்டு
இந்நிலையில் அனில் சவுகானிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: அனில் சவுகான் அசாமில் நீண்டகாலம் வசித்தார். இவர் டெல்லியில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கயை துவங்கினார். கடந்த 1995ம் ஆண்டு முதல் கார் திருட்டில் ஈடுபட துவங்கினார். தற்போது இவர் நாட்டின் மிகப்பெரிய கார் திருடன். கடந்த 27 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை திருடியுள்ளார்.

அரசு ஒப்பந்ததாரராக…
மேலும் சில டிரைவர்களையும் கொலை செய்துள்ளார். மேலும் ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார். கார்களை காஷ்மீர், நேபாள், வடகிழக்கு மாநிலங்களில் கார்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர் அசாமில் வசித்தபோது உள்ளூர் அரசியல்வாதிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு பணிகளை ஒப்பந்த அடிப்படையிலும் செய்துள்ளார். மேலும் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தார். இவர் மீது அசாமில் கொலை, ஆயுதச் சட்டம் மற்றும் காண்டாமிருகக் கொம்புகள் கடத்தல் பல வழக்குகள் உள்ளன. ஏற்கனவே சில முறை வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மத்திய மாவட்ட காவல்துறையின் சிறப்பு பிரிவினர் கைது செய்தனர். அதன்பிறகும் அவர் தொடர்ந்து குற்றங்களை செய்து வந்துள்ளார்.

3 மனைவியுடன் சொகுசு வாழ்க்கை
அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். இதனால் கார் திருட்டு, கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மும்பை, டெல்லி, அசாமில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரது தந்தை பெயர் தேஸ்ராஜ் சவுகான். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!