“ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

கிருஷ்ணகிரியில், காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை சிலர், நடுரோட்டிலேயே கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கொலையாளிகளை உடனடியாகக்‌ கைது செய்ய வேண்டும் எனவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகத்‌ தனிச் சட்டமியற்ற வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “கிருஷ்ணகிரியில்‌ காதல்‌ திருமணம்‌ செய்துகொண்டதற்காகப் பெண்ணின்‌ வீட்டாரால்‌ ஜெகன்‌ எனும்‌ இளைஞர்‌ நடுச்சாலையில்‌ கழுத்தை அறுத்துக்‌ கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது. நாகரிகம்‌ பெற்று குடிமைச் சமூகமாக வாழ்ந்துவரும்‌ தற்காலத்திலும்‌ காதல்‌ திருமணத்துக்கு எதிர்ப்பென்ற பெயரில்‌ அரங்கேற்றப்படும்‌ ஆணவப்படுகொலைகள்‌ ஒட்டுமொத்தச்‌ சமூகத்தையும்‌ வெட்கித்‌ தலைகுனியச்‌ செய்கிறன.

ஜெகனும்‌, அவரின் இணையர் சரண்யாவும்‌ உறவினர்கள்‌ என்றபோதிலும்‌, காதல்‌ திருமணத்துக்கு எதிர்ப்புத்‌ தெரிவித்து நடத்தப்பட்ட பச்சைப்படுகொலையை ஒருநாளும்‌ சகிக்க முடியாது. மனித மனங்கள்‌ ஒன்றுபட்டு, மனமொத்து செய்கிற திருமணத்துக்கு சாதி, மதம்‌, வர்க்கம்‌ என எந்தவொரு காரணியைக்‌ காட்டியும்‌ எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும்‌. அதை வன்மையாக எதிர்க்கிறேன்‌.

ஆகவே, தம்பி ஜெகனைப்‌ படுகொலைசெய்த கொலையாளிகளை உடனடியாகக்‌ கைதுசெய்து சிறைப்படுத்தி, அவர்களுக்குக்‌ கடும்‌ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்‌, காதல்‌ திருமணத்துக்கு எதிர்ப்புத்‌ தெரிவித்து நடத்தப்படும்‌ ஆணவக்கொலைக்‌ குற்றங்களுக்கு எதிராகத்‌ தனிச் சட்டமியற்ற வேண்டுமெனவும்‌ தமிழ்நாடு அரசை நாம்‌ தமிழர்‌ கட்சி சார்பாகக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌” என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.‌

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!