ஆடத்தெரியாத முதலமைச்சர் மேடை கோணல் என்கிறார்! – எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னைப் போன்று வாயால் வடை சுடு­ப­வன் நானல்­லன். வடக்கு மாகாண சபை நிர்­வா­கத்தை நடத்­தத் தெரி­யாது இருந்­து­விட்டு ஆடத் தெரி­யா­த­வன் மேடை கோணல் என்­ப­தைப் போன்று வடக்கு முத­ல­மைச்­ச­ரின் கருத்து அமைந்­துள்­ளது. என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கி­னால் இரண்டு வாரங்­க­ளுக்­குள் வடக்கு வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திக்­காட்­டு­வேன் என்று கூறி­யி­ருந்­தார். அதற்­குப் பதில் வழங்­கிய எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, கூரை ஏறி கோழி பிடிக்­கத் தெரி­யா­த­வன் வானம் ஏறி வைகுண்­டம் போவேன் என்­றா­னாம் என்­பது போன்று முத­ல­மைச்­ச­ரின் கருத்து இருப்­ப­தா­கச் சாடி­யி­ருந்­தார்.

இதற்­குப் பதி­ல­டி­யாக எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அவ­ரது கட்சி நீக்­கி­யும் அவைத் தலை­வ­ரின் ஆசிர்­வா­தத்­தி­னால் தொடர்ந்­தும் அந்­தப் பத­வி­யில் இருப்­ப­தா­கத் தவ­ரா­சா­வைச் சாடி­யி­ருந்­தார் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன். முத­ல­மைச்­ச­ரின் கருத்­துக்கு வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் தானே தயா­ரித்த கேள்வி, பதில் ஊடக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­தா­வது:

கேள்வி: தங்­கள் கட்சி தங்­களை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யும் அவைத் தலை­வ­ரின் ஆசி­யி­னா­லேயே தாங்­கள் அந்­தப் பத­வி­யில் உள்­ளீர்­கள் என­வும், எமது (மாகாண சபை­யின்) அதி­கா­ரங்­களை மற்­ற­வர்­கள் மடக்­கிப் பிடித்­த­தால்­தான் நாங்­கள் (மாகாண சபை) பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றோம் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யுள்­ளாரே. அது­பற்­றித் தங்­கள் கருத்து என்ன?

பதில்: நான் இன்றோ நேற்றோ பத­விக்­காக அர­சி­ய­லுக்கு வந்­த­வ­னும் அல்ல. வாயால் வடை சுடு­ப­வ­னும் அல்­லன். ‘வல்­ல­வ­னுக்­குப் புல்­லும் ஆயு­தம்’ என்­பார்­கள். இருக்­கின்ற அதி­கா­ரங்­களை வினைத்­தி­ற­னா­கச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு ஆளு­மை­யும், விவே­க­மும் தேவை.

மாகாண சபை கடந்த 5 ஆண்­டு­க­ளில் எங்­க­ளுக்கு இருக்­கும் அதி­கார வரம்­புக்­குள் வினைத்­தி­ற­னா­கச் செயற்­பட்டு எத்­த­னையோ விட­யங்­க­ளைச் செயற்­ப­டுத்தி இருக்­க­மு­டி­யும். அந்த இய­லாத் தன்­மையை நிரூ­பிக்க என்­னி­டம் நிறைய ஆதா­ரங்­கள் உண்டு. முத­ல­மைச்­ச­ரைப் பகி­ரங்க விவா­தத்­துக்கு வரு­மாறு கோரி­யுள்­ளேன், தற்­போ­தும் கோரி வரு­கின்­றேன். முத­ல­மைச்­சர் மாகாண சபையை வினைத்­தி­ற­னா­கச் செயற்­ப­டுத்­தி­யுள்­ளார் என்­ப­தைப் பகி­ரங்க விவா­தத்­தில் நிரூ­பித்­துக் காட்­டட்­டும். நான் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அல்ல, அர­சி­ய­லில் இருந்தே ஓய்வு பெறு­கின்­றேன்.

மாகாண சபை­யின் அச­மந்­தப் போக்­கி­னால் நாம் இழந்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களோ ஏரா­ளம். அபி­வி­ருத்தி என்­பது ஏதோ கெஞ்­சிப் பெறும் விட­ய­மல்ல. அது எமது உரி­மை­யின் ஓர் அம்­சம்.

பதவி மோகத்­தி­னால் நான் மாகாண சபை­யின் செயற்­பாட்­டின்­மை­யினை விமர்­சிக்­க­வில்லை. 45 வரு­டங்­க­ளிற்கு மேலாக அர­சி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­றேன். தமிழ் மக்­க­ளின் உரி­மைக்­கான ஆயு­தப் போராட்­டத்­தின் ஆரம்ப கர்த்­தாக்­க­ளில் நானும் ஒரு­வன். பொன் சிவ­கு­மா­ரன், லோறன்ஸ் தில­கர், பொன் சத்­தி­ய­சீ­லன் போன்­றோ­ரு­டன் ஆயு­தப் போராட்­டத்­தின் ஆரம்ப காலங்­க­ளி­லி­ருந்தே செயற்­ப­டு­ப­வர்­க­ளில் நானும் ஒரு­வன். மாவை சேனா­தி­ராசா, வண்ணை ஆனந்­தன், காசி ஆனந்­தன், குட்­டி­மணி, தங்­கத்­துரை, புஸ்­ப­ராஜா, வர­த­ரா­ஜப் பெரு­மாள், பால­கு­மார் போன்­றோ­ரு­டன் சம காலத்­தில் சிறை­யில் இருந்­த­வன்.

அண்­மை­யிற்­தான் அர­சி­ய­லுக்கு வந்த முத­ல­மைச்­ச­ருக்கு நான் இங்கு குறிப்­பி­டும் பெயர்­களே சில வேளை­க­ளில் தெரி­யா­ம­லி­ருக்­க­லாம். எனது அர­சி­யல் செயற்­பாட்­டி­னால் எனது சொந்த வாழ்­வில் இழந்­தவை ஏரா­ளம். நான் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­ட­த­னால் எனது மேற்­ப­டிப்­பிற்­குக்­கூட முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.

சந்­தி­ரிகா அம்­மை­யா­ரு­டைய ஓகஸ்ட் 2000ஆம் ஆண்டு புதிய அர­ச­மைப்பு வரைபு தொடர்­பான அமர்­வு­க­ளில் தொடர்ச்­சி­யா­கப் பங்­கேற்­றுப் பங்­க­ளிப்­புச் செய்­த­வர்­க­ளில் நானும் ஒரு­வன். பேரா­சி­ரி­யர் திஸ்ஸ விதா­ரண தலை­மை­யி­லான சர்வ கட்சி மாநாட்டு (2006-2007) தொடர் அமர்­வு­க­ளில் வடக்­கைச் சேர்ந்த தனி மனி­த­னாக நின்று தமி­ழர்­க­ளின் உரி­மையை ஏற்­கும் வண்­ணம் அர­ச­மைப்பு வரை­பினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யி­லான அறிக்­கை­யி­னைத் தயா­ரிப்­ப­தில் பெரிய பங்­க­ளிப்­பினை வழங்­கி­ய­வன்.

தற்­போ­தைய அர­ச­மைப்பு வரை­புக்­கான பொது மக்­கள் கருத்­த­றி­யும் குழு­வின் உறுப்­பி­ன­ராக இருந்து அந்­தக் குழு­வின் அறிக்­கை­யில் அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பான விட­யங்­க­ளில் 13ஆவது திருத்­தத்­தில் உள்ள குறை­பா­டு­கள் எல்­லா­வற்­றை­யும் நிவர்த்தி செய்­யும் வகை­யில் அந்த அறிக்­கை­யி­னைத் தயா­ரிப்­ப­தில் முழு­மை­யா­கப் பங்­க­ளிப்­புச் செய்­த­வன். அர­ச­மைப்­புச் சபை­யின் மத்தி- மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான உறவு தொடர்­பான உப­கு­ழு­வின் நிபு­ணத்­துவ உறுப்­பி­ன­ராக இருந்து அதன் அறிக்கை வரை­பில் அதே­போல் பங்­காற்­றி­யுள்­ளேன்.

13ஆவது திருத்­தச் சட்­டத்­தில் உள்ள குறை­பா­டு­க­ளினை முழு­மை­யாக இனங்­கண்டு அவற்றை நிவர்தி செய்­யும் விதத்­தில் அர­ச­மைப்பு மாற்­றம் அல்­லது திருத்­தம் அமை­யக்­கூ­டிய வகை­யி­லேயே எனது முன்­மொ­ழி­வு­கள் எப்­போ­தும் அமைந்­தி­ருந்­தன. எனது இந்த நிலைப்­பாட்­டி­னையே முத­ல­மைச்­ச­ரும் கொண்­டி­ருப்­ப­த­னால்­தான் முத­ல­மைச்­சர் சார்­பில், அன்­றைய அமைச்­சர் குரு­கு­ல­ரா­ஜா­வை­யும் இணைத்­துச் சென்று, அர­ச­மைப்­புச் சபை­யின் வழிப்­ப­டுத்­தும் குழு­வின் முன்­னால் நான் பரிந்­து­ரை­களை வழங்­கி­யி­ருந்­தேன்.

பதின்­மூன்­றா­வது திருத்­தச் சட்­டத்­தில் குறை­பா­டு­கள் உள்­ளன அல்­லது அதனை முழு­மை­யா­கச் செயற்­ப­டுத்­து­வ­தில் தடை­கள் உள்­ளன என்­ப­தற்­காக அது முற்­றாக நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய ஒன்­றல்ல. 35 விட­யங்­கள் மாகா­ணத்­திற்­கான விட­யப் பரப்­பாக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விட­யப் பரப்­பு­க­ளினை முற்­றாக மாகாண சபை­யி­னு­டைய அதி­கார வரம்­பிற்­குட்­பட்ட விட­யங்­க­ளா­கச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு ஏறத்­தாழ 300 நிய­திச் சட்­டங்­கள் வரை இயற்ற வேண்­டு­மென நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆனால் இது­வரை வடக்கு மாகாண சபை­யி­னால் பதின்­நான்கு நிய­திச்­சட்­டங்­களே ஆக்­கப்­பட்­டுள்­ளன. நிய­திச் சட்­டங்­களை ஆக்­கு­வ­தற்கு மாகாண சபை­யில் ஆள­ணிப் பற்­றாக்­குறை இருப்­ப­த­னால் துறை­சார் நிபு­ணர்­கள் ஊடாக அவற்­றி­னைத் தயா­ரிப்­ப­தற்கு வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­கள்­கூட உதவ முன்­வந்­தன. அவற்­றி­னைக்­கூ­டப் பாவித்து மாகாண சபைக்கு நிய­திச் சட்­டங்­களை ஆக்­கத் தெரி­ய­வில்லை.

இவர்­க­ளது மந்­தப் போக்­கி­னைக் கண்டு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­தும், நான் மீன்­பிடி தொடர்­பான நிய­திச்­சட்­டத்தை இயற்­றிக் கடந்த பெப்­ர­வரி மாதத்­தில் கொடுத்­தி­ருந்­தேன். இது­வரை அதற்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது. மாகாண சபைக்கு ஒதுக்­கப்­பட்ட விட­யப்­ப­ரப்­பு­க­ளிற்­கான நிய­திச் சட்­டங்­களை ஆக்­கு­வ­தன் மூலமே அவ்­வி­ட­யப் பரப்­பு­க­ளிற்­கான மத்­திய சட்­ட­வாக்­கங்­களை வட மாகா­ணத்­திற்­குள் செய­லி­ழக்­கச் செய்ய முடி­யும்.

அது­வரை மாகாண விட­யங்­க­ளில் மத்­தி­யின் தலை­யீடு சட்ட ரீதி­யா­கத் தவிர்க்க முடி­யாத ஒன்­றா­கும். இவ்­வாறு மாகாண சபை­யின் நிறை­வேற்­றுச் செயற்­பாட்­டின்­மை­யினை அடுக்­கிக் கொண்டே போக­லாம். ஆடத் தெரி­யா­த­வர் மேடை கோணல், என்று கூறிக் கொண்டே இருப்­பர் ” என்­றுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!