வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கிய இன்ஸ்பெக்டர்

சென்னை அசோக் பில்லர் அருகே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இன்ஸ்பெக்டர் ரூ.100 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். எனினும் பலர் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை அசோக் பில்லர் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் சுமார் 75 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் இலவசமாக புதிய ஹெல்மெட் ஒன்றையும் வழங்கினார். வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் எவ்வளவு அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்களிடம் கொடுத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் அறிவுரை வழங்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!