கீத் நொயார் கடத்தல் வழக்கு – விசாரணைகளை முடிக்குமாறு நீதிமன்றம் காலக்கெடு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அடுத்த இரண்டு தவணைகளுக்குள் விசாரணைகளை முடித்து, அது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்ப வேண்டும் என்றும், நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்றைய விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கேள்விகளுக்கு சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலர் பதில்களை அளித்துள்ளார் என்றும், எனினும், படுவத்த மறைவிடம் பற்றிய எந்த ஆவணமும் அதில் இல்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இந்த வழக்குடன் தொடர்புடைய சில ஆவணங்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கை விரைவாக முடித்து, ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிவான், டிசெம்பர் 11ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட மேஜர் புலத்வத்த, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, மற்றும் ஏனைய ஆறு சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!