அமைச்சரவைக் குழப்பம் குறித்து இனிப் பேசுவதில்லை! – வடக்கு மாகாண சபை முடிவு!

வடக்கு மாகாண சபை­யில் சட்­ட­வ­லு­வான அமைச்­ச­ரவை கடந்த ஜூன் மாதம் 29ஆம் திக­தி­யின் பின்­னர் இல்லை என்ற கருத்­தைப் பதிவு செய்­வ­து­டன், இனி­மே­லும் அமைச்­ச­ரவை விவ­கா­ரம் தொடர்­பில் சபை அமர்­வில் விவா­திப்ப­தில்லை என்று நேற்று முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் 132ஆவது அமர்வு நேற்று இடம்­பெற்­றது. அமைச்­ச­ரவை விவ­கா­ரம் தொடர்­பில் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் சிறப்பு அறி­விப்பை சபை­யில் முன்­வைத்­தார்.

“மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கால கட்­டளை வழங்­கிய ஜூன் மாதம் 29ஆம் திக­தி­யி­லி­ருந்து சபைக்­குப் பொறுப்­புச் சொல்­லக் கூடிய சட்­ட­வ­லு­வான அமைச்­ச­ரவை இல்லை. நீதி­மன்­றின் உத்­த­ரவு தமக்கு வழங்­கப்­ப­ட­வில்லை என்று அதி­கா­ரி­கள், அமைச்­சின் செய­லர்­கள் நிலைப்­பாடு எடுத்­தால் அது அவர்­க­ளுக்கு பின்­னர் சிக்­கலை ஏற்­ப­டுத்­தும். நீதி­மன்­றம் தனது உத்­த­ரவை வீடு வீடா­கவோ, திணைக்­க­ளங்­க­ளுக்கோ தனித் தனி­யாக வழங்க முடி­யாது” என்­றார் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, அமைச்­சர்­கள் யாரென்று தெரி­யாத நிலை­யி­லும், ஒவ்­வொ­ரு­வ­ரும் தாங்­கள் அமைச்­சர் என்று தெரி­வித்து கட­மை­யாற்­றிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். இந்­தச் சபை­யில் இதே­போன்று எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை ஒட்டி, தலை­மைச் செய­ல­ருக்கு அமைச்­சர்­க­ளுக்­கான சம்­ப­ளம் வழங்­க­வேண்­டாம் என்று கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தேன். ஆனா­லும் அமைச்­சர்­க­ளுக்­கான சம்­ப­ளம் வழங்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன், நீதி­மன்­றில் கூற வேண்­டிய வியாக்­கி­யா­னங்­களை சபை­யில் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். வடக்கு மாகாண ஆளு­நர்­தான் இந்த விட­யத்­தில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும். ஆளு­நர் பார்க்க வேண்­டிய வேலை­யைச் சபை செய்து கொண்­டி­ருக்­கின்­றது. அர­சி­யல் உள்­நோக்­கத்­துக்­காக சபை­யில் இந்த விட­யம் எடுக்­கப்­ப­டு­கின்­றது. அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தல் வழங்­க­வேண்­டி­யது ஆளு­நரே. சபை அல்­ல”-­என்­றார்.

மீண்­டும் எழுந்த எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, ஆளு­நர் தான் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார். அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைக் கூட்­டக்­கூ­டாது என்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ளார். அமைச்­சர்­க­ளின் பெயர்­க­ளைத் தர வேண்­டும் என்று ஆளு­நர் கோரி­யுள்­ளார் என்­றும் தெரி­வித்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வுக்­கும், சர்­வேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யில் கருத்து மோதல் ஏற்­பட்­டது. தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளான ச.சுகிர்­தன், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் ஆகி­யோர் கருத்­துத் தெரி­வித்­த­னர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த விவா­தத்­தின் பின்­னர், அமைச்­ச­ர­வைக் குழப்­பம் தொடர்­பில் சபை அமர்­வில் இனிப் பேசு­வ­தில்லை என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் ஒக்­ரோ­பர் மாதம் 23ஆம் திக­தி­யு­டன் நிறை­வுக்கு வரு­கின்­றது. அடுத்த மாதம் இரண்டு அமர்­வு­கள் இடம்­பெ­ற­வுள்­ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!