புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு – 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

பெரும்பாலன டாக்டர்கள் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ பரிசோதனை குறிப்புகளை எழுதுகின்றனர். தற்போது அது ஒரு பிரச்சினையாகவும், கிரிமினல் குற்றமாகவும் ஆகிவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதாபூர், உன்னாவோ, கோண்டா ஆகிய 3 மாவட்ட ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குறிப்புகளும், மருத்து சீட்டுகளும் எழுதி கொடுத்தனர். ஆனால் அவர்களின் கையெழுத்து புரியவில்லை. இதனால் சரியாக மருந்து மாத்திரை வாங்க முடியவில்லை. வேறு இடத்தில் மேல்சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து டாக்டர் டி.பி.ஜெய்ஸ்வால் (உன்னாவோ) டாக்டர் பி.கே. கோயல் (சிதாபூர்) டாக்டர் ஆஷிஸ் சக்சேனா (கோன்டா) ஆகியோர் மீது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு புரியாத கையெழுத்தில் மருத்துவ குறிப்பு மற்றும் மருந்து சீட்டு எழுதிய 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். அதை கோர்ட்டு நூலகத்தில் செலுத்தும் படியும் உத்தரவிட்டனர்.

அதிக வேலைப்பழுவின் காரணமாகவே மருந்து சீட்டு மற்றும் மருத்துவ குறிப்பு எழுதுவதில் பிழைகள் ஏற்பட்டது. என விசாரணையின்போது டாக்டர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

தெளிவான கையெழுத்தில் மருத்துவ குறிப்புகள் எழுதினால் மற்ற அனைத்து டாக்டர்கள் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க முடியும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சில மருத்துவ குறிப்புகளை வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

எனவே அனைவருக்கும் புரியும்படி தெளிவான கையெழுத்துடன் மருத்துவ குறிப்புகள் எழுதுவது டாக்டர்களின் கடமை என்று தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!