திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 1.75 லட்சம் மாணவர்கள் தமிழ் படித்து உலக சாதனை

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 470 மையங்களில் 1.75 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் சாதனை நிகழ்த்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,177 பள்ளிகள் உள்ளன. அதில் 2.75 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

அவர்களில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவர்கள், 90 ஆயிரம் மாணவிகள் என 1.75 லட்சம் மாணவர்களின் கல்வித் திறனை சோதித்து, தமிழ் படித்தல் திறனை ஆய்வு செய்து உலக சாதனை நிகழ்த்துவதற்கான முயற்சி இன்று நடந்தது.

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அதையொட்டி மாவட்டம் முழுவதும் 470 மையங்களில் 1.75 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு ஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும், எழுதியும் சாதனை நிகழ்த்தினர். காலை 9.30 மணி முதல் 9.45 மணி வரை எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த சாதனையை வீடியோவில் பதிவு செய்தனர். மேலும் உலக சாதனையை பதிவு செய்யும் 7 அமைப்புகள் நேரில் பார்வையிட்டனர்.

கலிபோர்னியாவில் கடந்த 2003-ம் ஆண்டு இதுபோன்ற சாதனை நிகழ்ச்சி நடந்தது. அதை முறியடிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித்துறையும் ஒருங்கிணைந்து நடத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!