ஐதேகவுடன் இணைந்திருக்கும் வரை மைத்திரியுடன் பேச்சு இல்லை! – மகிந்த திட்டவட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

“ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகினால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த தடையும் இல்லை. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த எமக்கு உரிமையுள்ளது. நாம் கடந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் அன்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ. துப்பாக்கிகளை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தமை தகவல்கள் மூலம் வெளியாகியுள்ளது. அன்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் கெப் ரக வாகனங்கள் அனைத்து மூலை முடுக்குகளில் எல்லாம் பயணித்தன. இந்த வாகனத்தில் எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கிகள் தான் இருந்துள்ளன.

பிரச்சினைகள் ஏதாவது அன்று வந்திருந்தால், இந்த துப்பாக்கிகளைத் தான் அவர்கள் பயன்படுத்தியிருப்பர்.இதன்போது, ஆயிரக் கணக்கில் மக்கள் மரணிக்க நேர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் யார் பொறுப்புச் சொல்வது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!