பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் வந்த பாம்பு

கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் வந்த பாம்பு, மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா, (வயது 60).

வர்க்கலை தபால் அலுவலகத்தில் அணிலா, ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில்தான் இவர், பணி ஓய்வு பெற்றார். நேற்று இவருக்கு ஒரு பார்சல் வந்தது.

இதுபற்றி தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர், தபால் அலுவலகம் வந்து பார்சலை பெற்றுக் கொண்டார். அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்தது.

இதனால் பார்சலை அணிலாவால் பிரிக்க முடியவில்லை. எனவே அவர், பார்சலை தபால் அலுவலக மேஜை மீது வைத்தார். அங்கு வந்த சக ஊழியர்கள் அந்த பார்சலை உடைத்து பார்த்தனர்.

அதற்குள் 15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அணிலாவிடம் தெரிவித்தனர். அவரும் பாம்பை தனக்கு பார்சலில் அனுப்பியது யார்? என்று விசாரித்தார். ஆனால் அதில் பார்சல் அனுப்பியவரின் விவரம் இல்லை.

அணிலாவுக்கு வந்த மர்ம பார்சல்.

அதே நேரம் பார்சலுக்குள் ஒரு மிரட்டல் கடிதமும் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அணிலா, வர்க்கலை போலீசில் புகார் செய்தார்.

இதுபற்றி அணிலா கூறும் போது, தனக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில் பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என தெரியவில்லை என்று கூறினார். போலீசார் பார்சலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தபால் அலுவலக கண்காணிப்பு கேமராக்களில் அணிலாவுக்கு பார்சல் அனுப்பியவர் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே பார்சலில் இருந்த பாம்பு வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!