இராணுவ ஆட்சிக்கு முனைகிறது ‘கள்ளர் கூட்டம்’! – ஜேவிபி எச்சரிக்கை

முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்வதற்கான எந்தவொரு ஆணையையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, பொதுமக்கள் வழங்கவில்லை. மஹிந்தவுடனுள்ள “கள்ளர் கூட்டம்”, இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டு வரவே விரும்புகின்றனர் என்று ஜேவிபியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதைக் காரணங்காட்டி, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில், முன்னாள் ஆட்சியாளர்களாக மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர் களமிறங்கி உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் இரண்டு, மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவ்விசாரணைகளை அடுத்து, அவர்களில் பலர், சிறைத் தண்டனை​களை அனுபவிக்க நேரிடும்.

இவ்வாறான வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, சில தந்திரோபாய நடவடிக்கைகளில், மஹிந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறானதொரு வலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அகப்பட்டுக் கொண்டுள்ளார். இதற்காகவே இடைக்கால அரசாங்கமென்ற தூண்டில் இடப்பட்டுள்ளது.

2015 ஜனவரியில், மைத்திரிபால சிறிசேனவுக்குப் பொதுமக்கள் வாக்களித்தது, மேற்கண்டவாறான “கள்ளர்களுடன்” அரசாங்கம் அமைப்பதற்கன்றி, அவ்வாறான “கள்ளர்களுக்கு” எதிராக நடவடிக்க எடுக்கவேயாகும். அந்தக் கள்ளர் கூட்டம், இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டு வரவே விரும்புகின்றதெனவும், விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!