அதிபர் வேட்பாளர் விவகாரம் – கூட்டு எதிரணிக்குள் வெடிக்கிறது பிரச்சினை

அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணிக்குள் மீண்டும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.

“அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய ராஜபக்கவே மிகவும் பொருத்தமானவர். தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர், நாட்டுக்குத் தலைமை தாங்கப் பொருத்தமானவர். அவருக்குப் பின்னால் கூட்டு எதிரணி இருக்கிறது” என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து. நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ‘சமல் ராஜபக்ச தான் பொருத்தமான அதிபர் வேட்பாளர்’ என்று கூறியுள்ளார்.

கூட்டு எதிரணிக் கட்சிகள் மத்தியில் முரண்பாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளர் தொடர்பாக தாம் எதுவும் பேசாமல் இருந்ததாகவும், ஆனால், கோத்தாபய ராஜபக்சவை பந்துல குணவர்த்தன முன்மொழிந்துள்ள நிலையில் இனிமேலும் தாம் அமைதியாக இருக்க முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனால், கூட்டு எதிரணிக்குள், அதிபர் வேட்பாளர் தொடர்பாக மீண்டும் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!