யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவிக்க மல்லுக்கட்டும் கடற்படை!

யாழ்ப்­பா­ணத்­தில் படையினரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில், கடற்­ப­டை­யி­னர் தமது வச­முள்ள தனி­யார் காணி­கள் உள்­ளிட்ட எந்­த­வொரு காணி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்கு இணங்­க­வில்லை. இரா­ணு­வத்­தி­னர், தமது வச­முள்ள தனி­யார் காணி­களை விடு­விப்­ப­தற்கு சாத­க­மான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் கடந்த வாரம் வட­க்கு கி­ழக்கு அபி­வி­ருத்­திக்­கான சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம் இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் வட­க்கு கி­ழக்­கில் உள்ள தனி­யார் காணி­களை டிசெம்­பர் 31ஆம் திக­திக்கு முன்­னர் விடு­விக்­க­ வேண்­டும் என்­றும், அதற்­காக இரண்டு மாகா­ணங்­க­ளின் ஆளு­நர்­கள் தலை­மை­யில் குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டது.

பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­முள்ள காணி­கள் தொடர்­பில் ஆரா­யும் கூட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. முப்­ப­டை­யி­னர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பிர­தேச செய­லர்­கள் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

வலி. வடக்­கில், கட்­டு­வன் – அச்­சு­வேலி பாதை­யினை திறப்­ப­தோடு, குரும்­ப­சிட்­டி­யில் எஞ்­சி­யுள்ள காணி­க­ளை­யும், பலாலி வீதி­யின் கிழக்­குத் திசை­யில் உள்ள காணி­க­ளை­யும் விடு­விக்க வேண்­டும். மயி­லிட்டி கலை­ம­கள் வித்­தி­யா­ல­யம் விடு­விக்­கப்­பட்­ட­போ­தும் மிக நெருக்­க­மா­கவே இரா­ணுவ வேலி­கள் உள்­ளன. அவற்றை மேலும் பின்­ந­கர்த்த வேண்­டும். இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் மேலும் 5 பாட­சா­லை­கள் உள்­ளன. அவற்­றை­யும் விடு­விக்க வேண்­டும், என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா கோரிக்கை விடுத்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்த இரா­ணு­வக் கட்­ட­ளைத் தள­பதி ஹெட்­டி­யா­ராச்சி, காணி விடு­விப்­புத் தொடர்­பில் ஆரா­யப்­ப­டு­கின்­றது. பாட­சா­லை­கள் அனைத்­தும் இந்த ஆண்­டுக்­குள் விடப்­பட வேண்­டும் என்று ஜனாதிபதியும் தெரி­வித்­துள்­ளார் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

வட­ம­ராட்­சி­யில் 7 இரா­ணுவ முகாம்­கள் உள்ள நிலை­யில் அதில் 4 பெரிய முகாம்­க­ளுக்­காக தனி­யார் காணி­கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. தனி­யா­ருக்­குச் சொந்­த­மான அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப்­பட வேண்­டும். அவை விடு­விப்­ப­தற்கு தாம­தம் தேவை­யில்லை. அதில் உள்ள அரச காணியை மட்­டும் வைத்­தி­ருந்­தால் முகா­மின் அளவு சிறி­தா­குமே அன்றி உட­ன­டி­யாக விலக வேண்­டிய நிலைமை இல்லை. தனி­யார் காணி­கள் அனைத்­தை­யும் உடன் விடு­விக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கோரிக்கை விடுத்­தார்.

வட­ம­ராட்சி பகு­தி­யில் உள்ள தனி­யார் காணி­களை வழங்­கு­வ­தில் அதிக நெருக்­கடி இருக்­காது. அந்­தப் பகு­தி­க­ளில் பல அரச காணி­கள் உண்டு. ஆனால் படை முகாம்­களை இடம்­மாற்­று­வ­தற்­காக அதிக செலவு ஏற்­ப­டு­கின்­றது. அதற்­கான நிதி கிடைக்க வேண்­டும் என்று இரா­ணு­வத் தள­பதி கூறி­யுள்­ளார். அடுத்த ஆண்­டும் பாது­காப்பு அமைச்­சுக்­குத்­தானே அதிக நிதி ஒதுக்­கி­யுள்­ள­னர். அந்த நிதி­யில் இதற்­கும் பெற்­றுக்­கொண்டு நிலத்தை விடு­விக்­க­லாம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கூறி­யுள்­ளார்.

சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் பிர­தேச சபை­யின் காணி­யும் மற்­று­மோர் இடத்­தில் மக்­கள் குடி­யி­ருப்­பின் நடுவே உள்ள இரா­ணுவ முகா­மை­யும் அகற்ற வேண்­டு­மென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் கோரிக்கை விடுத்­தார்.

அரி­யா­லைப் பகு­தி­யில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்ள பிர­தே­சத்­தில் ஓர் தாயா­ரின் 6 பரப்­புக்­காணி உள்­ளது. அதனை விடு­விக்­கு­மாறு அவர் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுக்­கின்­றார். அந்த 6 பரப்­புக்­காணி தொடர்­பி­லும் கரி­சனை கொள்­ளு­மாறு மாவட்­டச் செய­லா­ளர் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

இரா­ணு­வத்­தி­னர் காணி­கள் விடு­விப்­ப­தற்­கான சாத­க­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

நெடுந்­தீவு, வேலணை, மண்­கும்­பான் பகு­தி­க­ளில் கடற்­ப­டை­யி­னர் காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­த­னால் அவற்றை விடு­விக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் கோரிக்கை விடுத்­தார். காரை­ந­க­ரில் மட்­டும் 8 இடங்­க­ளில் கடற்­ப­டை­யி­னர் கையப்­ப­டுத்தி வைத்­துள்­ள­னர்.

காரை­ந­கர் இந்­துக் கல்­லூ­ரி­யின் 8 பரப்­புக் காணி உள்­பட அந்­தப் பகு­தி­க­ளை­யும் மக்­கள் பயன்­பாட்­டிற்கு விடு­விக்க வேண்­டு­மென நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னும் கோரிக்கை விடுத்­த­னர். இந்­தக் கோரிக்­கை­க­ளுக்கு கடற்­ப­டை­யி­னர் பதில் வழங்­க­வில்லை. மேலும், கடற்­ப­டை­யி­னர் தமது கட்­டுப்­பாட்­டி­லுள்ள எந்­த­வொரு காணி­யை­யும் விடு­விப்­ப­தற்கு கூட்­டத்­தில் இணக்­கம் தெரி­விக்­க­வில்லை.

இதே­வேளை நேற்­றைய கூட்­டம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், இரா­ணு­வத்­தி­னர் அதி­க­மான நிலங்­களை விடுத்­துள்­ளார்­கள். கடற்­ப­டை­யி­னர் விடு­வித்த நிலங்­கள் மிகக் குறைவு. தர­வு­களை கொடுத்­துள்­ளோம். காணி­களை எப்­போது எவ்­வ­ளவு விடு­விப்­பீர்­கள் என்ற கால அட்­ட­வ­ணை­யைத் தரு­மாறு கோரி­யுள்­ளோம். இரா­ணு­வத்­தி­னர் காணி­களை விடு­வித்­தா­லும் இன்­ன­மும் பல ஏக்­கர் காணி­கள் விடு­விக்க வேண்­டிய நிலை உள்­ளது. அந்த காணி­களை விடு­விப்­ப­தற்கு ஏற்­க­னவே முடி­வெ­டுத்­துள்­ள­தாக அவர்­கள் சொல்­கி­றார்­கள்.

புதிய பொலிஸ் நிலை­யங்­கள் அமைப்­பது பற்றி கதைத்­தார்­கள். அன­லை­தீ­வுப் பகு­தி­யில் பொலி­ஸா­ரின் பிர­சன்­னம் இல்லை. நீதி­மன்­றத்­தால் பிடி விராந்து பிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­கள் அங்கு போய் ஒளிந்து கொள்­ளும் நிலை காணப்­ப­டு­கி­றது. பொலிஸ் நிலை­யங்­களை அமைப்­ப­தற்கு காணி­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட வேண்­டும்.

சில பொலிஸ் நிலை­யங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் 2020, 2022 ஆம் ஆண்­டு­க­ளில் அமைக்­கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்­புத் தரப்­பி­னர் வச­முள்ள காணி­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் 22ஆம் திகதி ஆளு­நர் தலை­மை­யில் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. நாம் கேட்ட கேள்­வி­க­ளுக்­கான பதில்­கள் மற்­றும் நேர அட்­ட­வ­னை­களை 22ஆம் திகதி கூட்­டத்­துக்கு கொண்டு வரு­வ­தாக கடற்­ப­டை­யி­னர் மற்­றும் இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர். அதன் பின்­னர் 8ஆம் திகதி மீண்­டும் அரச தலை­வர் செய­லணி கூடு­கின்ற போது முனேற்­றங்­களை ஆராய முடி­யும் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!