நடுவானில் விமானத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – மும்பைக்கு விமானம் திருப்பி விடப்பட்டது

ஜகார்த்தா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதுபற்றி விமான பணிப்பெண்கள் மற்றும் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதும், அந்த பெண்ணையும் குழந்தையையும் அந்தேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் விமானம் மும்பையில் இருந்து மற்ற பயணிகளுடன் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டதும், 2 மணி நேரம் தாமதமாக ஜகார்த்தா செல்லும் என்றும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்காக வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!