18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செல்லுபடியாகும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அ.தி.மு.க.வின் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பதினெட்டு பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் என்றும், தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் , உச்சநீதிமன்றம் மூன்றாவது நீதிபதியாக சத்ய நாராயணனை நியமித்தது.

இவர் வழக்கை விசாரித்து, இன்று தீர்ப்பு அளித்தார். அதில் அவர்,‘சபாநாயகர் முறையான அவகாசம் கொடுத்து சரியான நடைமுறையை பின்பற்றி தான் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்கிறார். சபாநாயகர் உரிய விதிகளைப் பின்பற்றியே தகுதி நீக்கம் செய்திருக்கிறார். அதனால் சபாநாயகர் தனபால் பதினெட்டு உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும். அதனால் பதினெட்டு உறுப்பினர்களின் மனுக்களை தள்ளுப்படி செய்கிறேன்.’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இந்த தீர்ப்பில்,‘ பதினெட்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்படுகிறது என்றும் சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையும் நீக்கப்படுகிறது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஆளும் எடப்பாடி அரசிற்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி. வி .சண்முகம் பேசுகையில்,‘

துரோகிகளுக்கு நல்ல பாடம் கிடைத்துள்ளது.’ என்றார்.

இது குறித்து டி. டி. வி. தினகரன் தெரிவிக்கையில்,

இந்த தீர்ப்பு குறித்து பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல.’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!