சிறிலங்காவில் இன்று முதல் இரண்டு பிரதமர் செயலகங்கள் – மகிந்தவும் பொறுப்பேற்கிறார்

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில், மகிந்த ராஜபக்ச கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு பிரதமர்கள் நாட்டில் பதவியில் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், தற்போது, இரண்டு பிரதமர் செயலகங்களும் செயற்படவுள்ளன.

அலரி மாளிகையில் உள்ள பிரதமர் செயலகத்தில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பணியாற்றி வரும் நிலையிலேயே, மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகம், பிளவர் வீதியில் செயற்படவுள்ளது.

மகிந்த ராஜபக்ச நேற்று கண்டியில் தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை நடத்தியிருந்தார். அதையடுத்து, அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்கர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

அதேவேளை, புதிய பிரதமராகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டே தாம் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும், தமது அரசாங்கத்துடன், இணைந்து செயற்படுமாறும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மாகாணசபைத் தேர்தலையும், அதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்துவதே தமது இலக்கு என்றும் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!