ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது: – தொல்.திருமாவளவன்

இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா – இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனத் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “இலங்கையில் ராஜபக்சே பிரதமராகியிருப்பது இந்திய வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையில் ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவாகும். ரணில் விக்ரமசிங்கே இந்திய நாட்டின் ஆதரவாளர் என்பதால், மைத்திரி பால சிறிசேன அவரை நெருக்கடிக்கு ஆளாக்கி வெளியேற்றி விட்டு, அவரது அரசியல் எதிரி ராஜபக்சேவை பிரதமராக்கி இருக்கிறார். இதை இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய அரசியலில் குறிப்பாக தமிழ் மக்களின் நலனில் இது பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கை மற்றும் இந்திய வெளி விவகாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டத்தில் இந்திய அரசு இருக்கிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர்கள் மீதான பதவி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இது பொருந்தாது. ஆகவே, மேல்முறையீட்டுக்குச் செல்வது சரியானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், மேல்முறையீடு செய்வதைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிப்போட வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அந்த 18 தொகுதியில் மக்கள் நலத்திட்டப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை இந்த 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதைத் தள்ளி வைக்கும் சூழல் ஏற்படும். இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கைத் தினகரன் ஆதரவாளர்கள் விரைந்து நடத்துவது நல்லது.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக, திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு டிசம்பர் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. பயங்கரவாத சக்திகளிடம் இருந்து இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் இந்த மாநாட்டில் ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சிறுமி ராஜலட்சுமி படுகொலை தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி ராஜலட்சுமி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கைச் சாதாரண பிரிவில் பதிவு செய்திருப்பது வெட்கக்கேடு, இதைக் கண்டித்து நவம்பர் 5-ம் தேதி சேலத்தில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!