ஐதேக மீண்டும் பதவிக்கு வருமானால் அதற்கு சிறுபான்மைக் கட்சிகளே காரணம்! – மனோ கணேசன்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்குமானால், அதற்கு சிறுபான்மை கட்சிகளே முக்கிய காரணமாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததன் பின்னர் மஹிந்த தன்னுடைய பலத்தை வலுப்படுத்துவதற்கு சிறுபான்மை கட்சிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி மற்றும் பணத்தை வழங்கி தங்களது பக்கம் சேர்க்க முயன்றார். இருப்பினும் நாம், அவர்களின் பின் செல்லாமல் உறுதியாகவும் பொறுமையாகவும் உள்ளோம். அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இதுவரை இணைந்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களென எமக்கு கிடைக்கப்பெற்ற ஆதார தகவலாகும். ஆனால் இவ்விடயத்தில் சிறுபான்மை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களால் பேரம் பேச முடியவில்லை.இருப்பினும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடாகும். ஆகையால் அவர்கள் பின் நாம் ஒருபோது செல்ல மாட்டோம். எமது சிறுபான்மை கட்சியின் உதவியுடன் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்குமென நம்புகிறேன்” என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!