அமைச்சர் பதவிகளை ஏற்குமாறு கூட்டு எதிரணியினரை கெஞ்சும் ஜனாதிபதி!

அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்ள உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை வழங்கி முடிந்ததன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியினர் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலரேனும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் பிழையான எண்ணக்கரு உருவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தனர்.விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில ஆகிய கட்சித் தலைவர்களும் பிரசன்ன ரணதுங்க மற்றும் டலஸ் அழப்பெரும ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!