தனக்குத்தானே பிரசவம் பார்த்து 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசய பெண்!

`எனக்குப் பிரசவ வலி வந்தால், வீட்டில் இருக்கும் மூலையில் போய் படுத்துக்கொள்வேன். கொஞ்ச நேரத்துல நல்லபடியா குழந்தை பொறந்திரும். அதுவரை யாரையும் அருகில் விடமாட்டேன். குழந்தை பிறந்ததும், குழந்தையை எடுத்து தொப்புள் கொடியை அறுத்து, குளிப்பாட்டி கணவரிடம் கொடுப்பேன்” என அசால்டாக சொல்கிறார் 12-வது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றுள்ள சாந்தி.

திருச்சி மாவட்டம், முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளியான இவருக்கும் சாந்தி என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரம்பம் முதலே மருத்துவரிடம் சென்று அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயங்கி வந்த சாந்திக்கு பிரசவ நேரங்களில் அவரின் கணவர் கண்ணன் உடன் இருந்து உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாந்தி, நேற்று முன்தினம் இரவு 12வது குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்திருக்கிறார் என்பதுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சாந்தி-கண்ணன் தம்பதிக்கு, இதுவரை சீதா, கீதா, கார்த்திக், உதயகுமாரி, தர்மராஜ், சுப்புலட்சுமி, கிருத்திகா, தீபக், தீப்தி, ரித்தீஷ் கண்ணன், பூஜா உள்ளிட்ட 11 குழந்தைகள் பிறந்துள்ளார்கள். இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்களில் தீப்தி மற்றும் ரித்தீஷ் கண்ணன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாகவும், மூத்த மகள் சீதாவுக்கு திருமணம் முடித்து குழந்தை பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்தி 12-வது முறையாகக் கர்ப்பமானார். மேலும், சாந்தி தன் 12-வது குழந்தையையும் மருத்துவமனைக்குச் செல்லாமல் தன் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில், வீடுகளில் நடக்கும் பிரசவத்தைத் தடுக்கத் தமிழக சுகாதாரத்துறை கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்ட மருத்துவ நிர்வாகக் குழுவினர் கடந்த வாரம் சாந்தியை நேரில் சந்தித்து, பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்துகொள்ளும்படி அறிவுரை கூறி அழைத்தார்கள். ஆனால் சாந்தி, மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்குப் பயமாக உள்ளது என்றும், அதனால் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வதாகவும் கூறி மருத்துவர்களுடன் செல்ல மறுத்துள்ளார். இந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் பேரில், மருத்துவக் குழுவினர் அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சில தினங்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கியிருந்த சாந்தி, பிரசவ வலி வந்தால் மருத்துவமனைக்கு வருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி, வீட்டுக்குச் சென்றவர் மீண்டும் வரவே இல்லை. நேற்றுமுன்தினம் இரவு சாந்திக்கு பிரசவ வலி வரவே, சாந்தி தான் வழக்கமாகப் பிரசவ வலி வந்தால் போய் படுக்கும் வீட்டின் மூலையில் போய் படுத்துக்கொள்ள சிறிது நேரத்தில் அவருக்குச் சுகப்பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சாந்திக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த மருத்துவக் குழுவினர், விரைந்து வந்து சாந்தியையும், பிறந்த பெண் குழந்தையும் மருத்துவ சிகிச்சைக்காக முசிறி அடுத்துள்ள தண்டலை புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சாந்தி நம்மிடம், “கூலி வேலை செய்யும் அவர், கிடைக்கும் வேலைகளுக்குப் போவார். முதலில் கர்ப்பமான நான், மருத்துவமனைக்குப் போனால் ஏதாவது நடந்துவிடும் எனப் பயந்தேன். அதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லாமல் குழந்தைப் பெற்றுக்கொள்ள நினைத்தேன். இந்த நிலையில், எனக்குப் பிரசவ வலி வந்தபோது, இறந்துபோன எங்க மாமனார் கடைசியாக உயிர் விட்ட வீட்டின் மூலையில் போய் படுத்துக்கொண்டு குலசாமியை வேண்டிக்கொண்டேன். பிரசவம் நல்ல முறையில் பிறந்தது. முதலில் பெண் குழந்தை பிறந்ததால், அடுத்து ஆண் பிள்ளை பெற்றுக்கொள்ள நினைத்தோம். பிறகு குழந்தைகள் இருந்தால் நல்லதுதானே என கருவான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டேன். எனக்குப் பிரசவ வலி வந்தால், அந்த இடத்தில் படுத்துக்கொள்வேன்.

எனக்குத் தேவையான சுடு தண்ணீர் உள்ளிட்டவற்றை அவர் தயார் செய்து வைத்திருப்பார். குழந்தைப் பிறந்ததும், குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்துவிட்டு, குழந்தையைக் குளிப்பாட்டி அவரிடம் கொடுப்பேன். பிறகு கொஞ்ச தூரம் நடந்தால் நஞ்சுக் கொடி கீழே விழுந்துவிடும். பிறகு குளித்துவிட்டு குழந்தையைப் பார்த்துக்கொள்வேன். எனக்கு அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறந்ததால், இப்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு போதும் பொண்ணு எனப் பெயர் வைக்கச் சொல்கிறார்கள். நான் எல்லா குழந்தைக்கும் நல்ல பெயர் வைத்துவிட்டு இந்தக் குழந்தைக்கு அப்படிப் பெயர் வைக்க விருப்பமில்லை. இனி குழந்தை வேண்டாம் என முடிவு செய்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முடிவெடுத்துள்ளேன்.

இப்போது உடல்நிலை கொஞ்சம் மோசமாக உள்ளதால் சிலவாரங்கள் கழித்து அதைச் செய்துகொள்ளப் போகிறேன் என்ற சாந்தி, சீதாவும், தீப்தி மற்றும் ரித்தீஷ் ஆகியோர் இறந்ததை இன்னும் என்னால் மறக்க முடிவில்லை. ஆனால், மிச்சமுள்ள மற்ற எல்லா குழந்தைகளுக்கும் குறையில்லாமல், வயிறார சோறும், நல்ல துணிமணியும் எங்களால் கொடுக்க முடிகிறது. பிள்ளைகளை நல்ல முறையில் ஆளாக்கி வளர்த்துவிட்டால் போதும்” என்று சிரிக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!