மகிந்த அரசு தோல்வி – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதான அறிவிப்பை தம்மால் ஏற்க முடியாது என்றும், வா்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், மகிந்த அணியைச் சேர்ந்த தினேஸ் குணவர்த்தன, திலங்க சுமதிபால உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஐதேக உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

தற்போது கையொப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 11.25 (சிறிலங்கா நேரம்)

வடிவேல் சுரேசும் ரணில் பக்கம் தாவினார்

அண்மையில் மகிந்த ராஜபக்ச- மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்ற மற்றுமொரு ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தற்போது மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 11.15 (சிறிலங்கா நேரம்)

மகிந்த அரசு தோல்வி -சபாநாயகர் அறிவிப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருப்பதாகவும், அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். குரல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மகிந்த அணியினர் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனினும், வாக்கெடுப்பில், மகிந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர் நாளை வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுக்கு நடத்தப்படவில்லை என்றும் இதனை தாம் ஏற்க முடியாது என்றும் மகிந்த அணியைச் சேர்ந்த திலங்க சுமதிபால தெரிவித்தார்.
பதிவு நேரம் – முற்பகல் 11.05 (சிறிலங்கா நேரம்)

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியது

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கூறியுள்ளார்.

அதேவேளை சபாநாயகர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளார் என்றும், இன்றைய சபை அமர்வுகள் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறுவதாக உள்ளது என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.55 (சிறிலங்கா நேரம்)

மீண்டும் ரணில் பக்கம் வசந்த சேனநாயக்க

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தற்போது, மீண்டும் ஐதேகவுக்குத் திரும்பியுள்ளார்.

அவர் தற்போது நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் குழு அறையில் ஐதேக தலைவர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோருடன் அமர்ந்துள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.51 (சிறிலங்கா நேரம்)

நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும்கட்சியினர் குழப்பத்தில் ஈடுபட்டதை அடுத்தே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.31 (சிறிலங்கா நேரம்)

ரணில் பக்கம் தாவும் மைத்திரி அணியினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, பியசேன கமகே, மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்று அமர்ந்துள்ளனர்.

இதனால், நாடாளுமன்றத்தில் பரபரப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.
பதிவு நேரம் – முற்பகல் 10.27 (சிறிலங்கா நேரம்)

நாடாளுமன்றத்துக்குள் பெரும் பதற்றம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதால் சபைக்குள் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்ற தொலைக்காட்சி நேரலை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளமும் செயலிழந்துள்ளது.
பதிவு நேரம் – முற்பகல் 10.26 (சிறிலங்கா நேரம்)

வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தார். அதனை அந்தக் கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்தார்.

இந்தப் பிரேணை மீது வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச அணியினர் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.24 (சிறிலங்கா நேரம்)

நிலையியல் கட்டளையை இடைநிறுத்தினார் சபாநாயகர்

நாடாளுமன்ற நிலையியல் கட்டளையை இடைநிறுத்தி வைப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.18 (சிறிலங்கா நேரம்)

நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜேவிபியினர், நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்தனர்.
பதிவு நேரம் – முற்பகல் 10.14 (சிறிலங்கா நேரம்)

சபையை ஒத்திவைக்க தினேஸ் குணவர்த்தன பிரேரணை

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அணியினர் நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைக்கக் கோரும் பிரேரணையை ஆளும்கட்சியைச் சேர்ந்த தினேஸ் குணவர்த்தன முன்வைத்துள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.14 (சிறிலங்கா நேரம்)

சபையில் சுமந்திரன் முன்வைத்த முக்கிய யோசனை

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தி வைப்பதற்கான யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்துள்ளார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.14 (சிறிலங்கா நேரம்)

பரபரப்புடன் தொடங்கியது நாடாளுமன்ற அமர்வு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பான, சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தற்போது வாசித்து வருகிறார்.
பதிவு நேரம் – முற்பகல் 10.04 (சிறிலங்கா நேரம்)

மகிந்தவுக்கே பிரதமர் ஆசனம்

இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மகிந்த ராஜபக்சவே பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ஆசனம் வழங்க சபாநாயகர் கரு ஜெயசூரிய மறுப்புத் தெரிவித்திருந்தார்.

எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு வசதியாகவே அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதிவு நேரம் – முற்பகல் 09.44 (சிறிலங்கா நேரம்)

நாடாளுமன்றம் வரமாட்டார் மைத்திரி

இன்று நடக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கமாட்டார் என்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், அறிவிக்கப்பட்டதாக, ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற செயற்பாட்டு நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற பெரும்பான்மை மூலம் தீர்மானிப்பது என்றும் இன்று காலை நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் படி, புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறிலங்கா அதிபரின் சிம்மாசன உரை இன்றியே ஆரம்பமாகவுள்ளது.
பதிவு நேரம் – முற்பகல் 09.41 (சிறிலங்கா நேரம்)

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிராக, ஜேவிபியினால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பதிவு நேரம் – முற்பகல் 09.36 (சிறிலங்கா நேரம்)

கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிவு

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக, சபாநாயகர் செயலகம் சற்று முன் அறிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராயப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை இன்றைய சபை அமர்வில் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பதிவு நேரம் – முற்பகல் 09.30 (சிறிலங்கா நேரம்)

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில், கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகிறது.
பதிவு நேரம் – முற்பகல் 08.45

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!