குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்படுவது ஏன்? மு. க. ஸ்டாலின்

குட்கா வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அவசரமாக தாக்கல் செய்யப்பட்டதில் சந்தேகம் எழுந்திருப்பதாக தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

“நள்ளிரவில் சி.பி.ஐ. இயக்குநர் விநோதமான சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மாற்றப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை, சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநர் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், குட்கா வழக்கில் ஒரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாகத் தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாவுக்கு மேல் வரி இழப்பு ஏற்படுத்தி, 40 கோடி ரூபாவுக்கு மேல் இலச்சம் பெற்றதற்கான குட்கா டையரி கைப்பற்றப்பட்ட வழக்கில், 40 இடங்களுக்கும் மேல் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி . டி.கே ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அப்படியொரு மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், தாக்கல் செய்யப்பட்டுள்ள முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையில் கீழ்மட்ட அதிகாரிகளும், குட்கா கம்பனியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், இந்த ஊழலின் பிதாமகன்களாக திகழ்ந்து, ஊரை ஏமாற்றி உலாவரும் உயர் பதவியில் இருப்பவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை என்பது, விசாரணை திணறித் திசை மாறுகிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக குட்கா வழக்கை கவனித்து வந்த சி.பி.ஐ. உயரதிகாரி மாற்றப்பட்டுள்ள நிலையில், மின்னல் வேகத்தில் இப்படியொரு முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதன் அடிப்படை நோக்கம் அழுத்தமா ? அல்லது அரசியலா ? அல்லது மேலிடத்துக் கட்டளையா ? என்பதெல்லாம் கேள்விக் குறியாகியிருக்கிறது. குட்கா டையரியில் இடம்பெற்றுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளையும், அமைச்சரையும் விலக்கி விடுவிக்க இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆகவே, குட்கா இலஞ்சல் வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்ட ரீதியாக நடைபெற வேண்டும் என்றும், டைரியில் இடம்பெற்றுள்ளவர்கள் எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சணையில்லாமல் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்தி, சி.பி.ஐ. என்ற மிக உயர்ந்த அமைப்பின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் சி.பி.ஐ. பொறுப்பு இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுக்கு சுகாதாரக் கேடுகளையும், உயிருக்கு பேராபத்தையும் ஏற்படுத்தும் குட்கா விற்பனை இலஞ்ச விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால், டி.ஜி.பி. உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கும் எண்ணத்தில் சி.பி.ஐ. விசாரணை திசை மாறி விடாமல், பிழையான பாதையில் சென்றுவிடாமல் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எள்ளளவும் பிசகாமல் சி.பி.ஐ. மதிக்க வேண்டும்.

அதற்கு மாறாக உள்நோக்கத்தோடும் பெயரளவுக்கும் நடைபெற்றால் நியாயமான, சுதந்திரமான, எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாத விசாரணை கோரி தி.மு.க. சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிட நேரிடும் என்றும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று அந்த அறிக்கையில் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!