ஆர்வக்கோளாறில் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்: – பா.ஜ.க எம்.பி-க்களிடம் கடுகடுத்த மோடி

ஊடங்கங்களிடம் தேவை இல்லாத விஷயங்களைப் பேசக்கூடாது என பா.ஜ.க எம்.பி-க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.சமீபத்தில் நடந்த இரு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாட்டை உலுக்கியது. காஷ்மீர் சிறுமி 8 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவோ நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த இருசம்பவங்களும் பா.ஜ.க-வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அக்கட்சியின் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பா.ஜ.க எம்.பி-க்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, ”தொடர்ந்து தேவையில்லாத கருத்துகளைப் பேசிவருவது ஊடங்கங்களுக்கு மசாலா அளிப்பதுபோல் ஆகிவிடுகிறது. எந்த விஷயத்தையும் முழுமையாக அறியாமல் ஊடகங்கள் முன்பு ஏதோ சமூக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் போல் நீங்கள் பேசுவது விமர்சனத்தை உண்டுபண்ணுகிறது. இதனால் கட்சி, ஆட்சியின் புகழுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆர்வக்கோளாறில் கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அங்கீகாரம் அளித்தவர்கள் மட்டுமே பேச வேண்டும். ஊடங்கங்கள் அவர்களது பணிகளை செய்கிறார்கள். அவர்களைக் குறை சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!