தண்டவாளத்தில் தவறி விழுந்த ஒரு வயதுக் குழந்தை: புகையிரதம் மேலேறி சென்றும், மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்

இந்தியா, உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சோனூ என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஜான்சிக்கு செல்வதற்காக புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவரது 2-வது குழந்தை ஷிபாவிற்கு ஒரு வயது ஆகிறது. சோனூ புகையிரதத்தில் ஏறியபோது யாரோ அவரது கைப்பையை திருடி சென்று விட்டனர். புகையிரதத்தில் அமர்ந்த பிறகு தான் அதை பார்த்தார்.

எனவே புகையிரதத்தில் இருந்து இறங்கிவிட முடிவு செய்தார். மனைவி குழந்தைகளை இறங்கும்படி அழைத்துவந்தார். அதற்குள் புகையிரதம் புறப்பட்டு விட்டது. உடனே அவசரமாக இறங்கினார்கள்.

2-வது குழந்தை ஷிபாவை அவளது தாயார் தோளில் தூக்கி வைத்திருந்தார். அவசரமாக புகையிரதத்தில் இருந்து இறங்கியதால் குழந்தை அவரது தோளில் இருந்து தவறி கீழே தண்டவாளத்தில் விழுந்துவிட்டது. அதற்குள் புகையிரதம் வேமாக புறப்பட்டு சென்றது.

கீழே விழுந்த குழந்தை தண்டவாளத்தின் கம்பிக்கும், சுவருக்கும் இடையே படுத்த நிலையில் கிடந்தது. புகையிரதம் அதை கடந்து சென்றது. இவ்வாறு 4 பெட்டிகள் கடந்து சென்றன. அதுவரை குழந்தை தலையையோ, கை கால்களையோ தூக்காமல் புத்திசாலித்தனமாக படுத்திருந்தது.

இதனால் புகையிரதத்தில் அந்த குழந்தை அடிபடவில்லை. புகையிரதம் கடந்து சென்றபோது எந்த நேரத்திலும் குழந்தை உயிர் போகலாம் என்று பெற்றோர்களும், அங்கு நின்று கொண்டிருந்தவர்களும் பதறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை. புகையிரதம் கடந்து சென்றதும், இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று குழந்தை எடுத்து தாயிடம் கொடுத்தார். குழந்தையை உயிருடன் பார்த்ததும் தாயும் அங்கு கூடியிருந்த பெண்களும் ஒரு பக்கம் ஆனந்தம் இருந்தாலும் அதிர்ச்சியோடு கதறி அழுதனர்.

குழந்தையின் உடலில் ஒரு சிராய்ப்பு காயம் கூட இல்லாமல் தப்பியது மிகவும் அதிசயமாக பார்க்கப்பட்டது. கடவுளின் அருளால்தான் குழந்தை பிழைத்துக் கொண்டதாக அங்கிருந்தவர்கள் பேசினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!