தற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்கள்:ஞானமுத்து ஸ்ரீநேசன்

தற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் தற்போது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது அரசாங்கம் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஜனநாயக ரீதியில் தங்கள் பலத்தை நிரூபிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

அரசாங்கம் என்பது ஜனநாயக ரீதியாக தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையெனில் அது சட்டத்திற்குப் புறம்பான அல்லது ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாங்கமாகவே இருக்கும்.

ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 03 தடவைகள் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஜனாதிபதி அவர்கள் ஒரு கட்சி சார்பாகச் செயற்பட்டு அதனை அங்கீகரிக்காமல் இருக்கின்றார்.

பெரும்பான்மை அடிப்படையில் இருக்கின்ற உறுப்பினர்கள் அரசாங்கம் என்ற ஒன்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் சிறுபான்மையாகக் காணப்படும் உறுப்பினர்கள் தான் அரசாங்கம் இருக்கின்றதென தான்தோன்றித் தனமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் இல்லை என்பதுதான் உண்மையான கருத்து.

பாராளுமன்றத்தில் பல்வேறுபட்ட குழுக்கள் இருக்கின்றன.

இந்தக் குழுக்களை அமைப்பதற்கு முதற்படியாக ஒவ்வொரு தரப்பிலும் இருந்து தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.

அந்தத் தெரிவுக் குழுவில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.

தற்போதைக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அணியொன்று இருக்கின்றது.

அதனை விட எண்ணிக்கையில் குறைவானவர்கள் ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தெரிவுக் குழுவில் உறுப்புரிமை ஆளுங்கட்சி என்று சொல்பவர்களுக்கு குறைவாகவே கிடைக்க வேண்டும்.

ஒழுங்கான ஒரு அரசாங்கம் இருக்கின்ற போது தான் தெரிவுக் குழு தெரிவு செய்யப்படல் வேணடும்.

அரசாங்கம் என்ற ஒன்று இல்லாதவிடத்தில் தெரிவுக் குழு என்பதும் இல்லாமல் போய்விடும்.

அவ்வாறு பார்க்கப் போனால் அரசாங்கம் இல்லாதவிடத்து இரண்டு அணிகள் இங்கிருக்கின்றது.

ஒன்று ஆளும் தரப்பு என்று தங்களைத் தாமே சொல்லிக் கொள்ளும் மஹிந்த அணியினர் மற்றையது அவர்களுக்கு எதிரான அணியினர் என்று இரண்டு அணிகள் இருக்கின்றன.

உண்மையில் இந்த தெரிவுக் குழு அமைப்பதாயின் அணிகளில் உள்ள பெரும்பான்மை அடிப்படையிலேயே அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!