நான்கு மணித்தியாலங்களில் கட்டி முடித்த மூங்கில் வீட்டிற்காக $64,385 பரிசு பெற்ற பிலிப்பீன்ஸ் இளைஞர்!

பிலிப்பீன்ஸை சேர்ந்த ஏர்ல் பெட்ரிக் ஃபார்லேல்ஸ் (23) என்ற இளைஞர் நான்கு மணித்தியாலங்களில் கட்டி முடித்த மூங்கில் வீட்டிற்காக அவருக்கு 64,385 அமெரிக்க டொலர் மதிப்புள்ள (£50,000 = $64,385) பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.

பிலிப்பீன்ஸில் குடிசைகள் மலிந்துள்ளதை சமாளிக்கும் வகையில், குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியாக அவர் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார். அவர் உருவாக்கியுள்ள இந்த மூங்கில் வீட்டை கட்டுவதற்கு 1 சதுர மீட்டருக்கு (10.76 சதுர அடி) சுமார் 50 அமெரிக்க டொலர் மாத்திரமே செலவாகின்றது.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட பெட்ரிக், தாம் உருவாக்கியது ஒரு நடைமுறைக்கு உகந்த வீடு என்று தெரிவித்துள்ளார். வழக்கமான வீட்டை விடவும் இதில் கூடுதலாக ஒரு வசதி உள்ளது என்று கூறிய அவர் “சமூகத்தில் உருவாகும் குப்பையை பயனுள்ள வளமாக மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிலாவைச் சேர்ந்தவரான ஃபோர்லேல்ஸ் கட்டிய இந்த மூங்கில் வீட்டுக்கு ‘றோயல் இன்ஸ்டிடியூட் ஒஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ்’ அமைப்பு $64,385 மதிப்புள்ள பரிசை அளித்துள்ளது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ‘கியூபோ’ சமுதாய வீடு கட்டும் திட்டத்துக்கான மாதிரியை உருவாக்கப் பாடுபடப் போவதாக அவர் கூறினார்.

மணிலாவின் சனத்தொகை 1.2 கோடி. இவர்களில் 40 லட்சம் பேர் மேம்படுத்தப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். அடுத்த மூன்றாண்டுகளில் இந்த நகருக்கு சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்குவது வளர்ந்துவரும் இந்த நகருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!