அட்மிரல் விஜேகுணரத்னவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிவான்

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு அவரது சட்டவாளர் நேற்று கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும், நீதிவான் அதற்கு மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்ட அட்மிரல் விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்தார்.

நேற்று அவர் கோட்டே நீதிமன்றத்தில் சரணடைந்த போது, நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது அவரைக் கைது செய்ய நீதிவான் ரங்க திசநாயக்க உத்தரவிட்டார்.

இதற்கு முந்திய விசாரணைகளின் போது, அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டவாளர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். எனினும் நேற்று அவர் வழக்கிற்கு வரவில்லை.

அட்மிரல் விஜேகுணரத்னவின் சார்பில் முன்னிலையான சட்டவாளர், அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோரினார்.

ஆனால், அதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அட்மிரல் விஜேகுணரத்ன இடைவேளையின் போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய போது, அவரது பாதுகாப்பு அதிகாரிகளால், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விடயத்தை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன், அவருக்கு பிணை வழங்கப்பட்டால் சாட்சிகளுக்கு ஆபத்து என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளர் சுட்டிக்காட்டினர்.

வழக்கின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமுவவை அட்மிரல் விஜேகுணரத்ன தலைமையிலான அதிகாரிகள் தாக்கியது குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, நீதிவான், உங்களின் பதவி நிலையின் மூலம், சாட்சிகளின் மீது தலையீடு செய்யவும், விசாரணைகளைக் குழப்பவும் முடியும் என்பதால், நான் உங்களுக்கு பிணை வழங்க மறுக்கிறேன்” என்று கூறி அவரை டிசெம்பர் 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!