மகிந்த அணியில் இருந்து வெளியேறினார் விஜேதாச – சுதந்திரமாக செயற்பட போவதாக அறிவிப்பு

அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து, கல்வி, உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் சற்றுமுன்னர் இதனை கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் சுதந்திரமான உறுப்பினராக இருந்தாலும், தாம் தொடர்ந்தும் கல்வி, உயர்கல்வி அமைச்சராக பதவியில் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் புறக்கணித்திருந்த போதிலும், அரச தரப்பில், இன்று அவர் மாத்திரமே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.

இன்றைய அமர்வில் உரையாற்றிய அவர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் தமது கட்சிகளை கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளதோ அவரிடம் அரசாங்கத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, சிறிலங்கா அதிபருடன், சபாநாயகர் பேச்சு நடத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

சிறிலங்கா அதிபருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்களை ஏற்பாடு செய்வதற்கு தான் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!