ட்ரம்பிற்கு டுவிட்டரில் பதிலடிகொடுத்த இந்திய யுவதி

புவி வெப்பமயமாதலை பற்றி விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு இந்திய யுவதியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரின் மூக்கை அறுக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக பனிப்பொழிவுடன் கூடிய பருவ காலநிலை நீடித்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் இதனால் அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 1600 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புவி வெப்பமயமாதலில் என்னதான் நடந்தது? முந்தைய வரலாறுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் கொடூரமான பனிப்பொழிவு நீடித்து வருகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாத் நகரைச் சேர்ந்த அஸ்தா சர்மாஹ் என்னும் யுவதி தனது டுவிட்டர் பக்கத்தில்,

உங்களை விட நான் 54 வயது இளையவள். சுமாரான மதிப்பெண்களுடன் தற்போது நான் உயர்நிலை கல்வியை முடித்திருக்கிறேன். இருந்தாலும், பருவகாலநிலையும் சீதோஷ்ண நிலையும் ஒன்றல்ல என்பதை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு இது புரிவதற்கு வசதியாக நான் பயன்படுத்திய கலைக்களஞ்சியம் (encyclopedia) நூலை உங்களுக்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன்.

அந்த நூலில் இதுதொடர்பான படங்கள் உள்பட அனைத்து விபரங்களும் அடங்கியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இக் கருத்துக்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் உள்ள டுவிட்டர் கணக்குகளில் இருந்து சுமார் 27 ஆயிரம் விருப்புகளும் 6.7 ஆயிரம் ரீ டுவிட்டுகளும் பதிவாகியுள்ளன.

மேலும் அரேபிய கடல் பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள அஸ்தா சர்மாஹ் விரும்பினால் அவருக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக ஆதரவு கரத்தையும் பலர் நீட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!