மேலாடையை அவிழ்த்து அவமானம்- ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

தேர்வு அறையில் மேலாடையை அவிழ்த்து அவமானப்படுத்தியதால் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ராகி கிருஷ்ணன் (வயது 19). தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாதிரி தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மேற்பார்வையாளர்கள் தேர்வு அறைக்கு வந்தனர். மாணவி ராகி கிருஷ்ணன் அணிந்திருந்த சால் எனப்படும் மேலாடையில் ஏதே எழுத்துக்கள் இருந்தன. தேர்வில் காப்பியடிக்க எழுதப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

பெண் ஊழியர்கள் உதவியுடன் அவரது மேலாடையை அவிழ்த்து சோதனை செய்தனர். சோதனை செய்தபோதே மாணவி கல்லூரியை விட்டு ஓட்டம் பிடித்தார். ஆசிரியர்கள் அவரை பின் தொடர்ந்தனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிய ராகி கிருஷ்ணன் ரெயில் தண்டவாளம் அருகே நின்றார்.

அப்போது திருவனந்தபுரம்- கொல்லம் இடையே கேரள எக்ஸ்பிரஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து மாணவிகள் கூறும்போது,

ராகி கிருஷ்ணன் சாலில் உள்ள எழுத்துக்களுக்கும் பாடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மற்ற மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தியதும், ஊழியர்கள் முன்பு ஆடைகளை அவிழ்த்ததாலும் அவமானம் அடைந்து ராகி கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டாக கூறினர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!