கேரளா வெள்ள பாதிப்பு- மீட்பு பணிக்கான ஹெலிகாப்டர் வாடகையாக ரூ.290 கோடி கேட்கும் மத்திய அரசு

கேரளாவை நிலைகுலைய வைத்த வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் வாடகையாக மத்திய அரசு ரூ.290 கோடியை கேட்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது.

கேரளாவில் வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்க முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டது. குறிப்பாக விமானப் படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் மக்களை துரிதமாக மீட்பதில் பெரும் உதவியாக இருந்தது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரள வெள்ள பாதிப்பு குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தகவல்களை தெரிவித்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-

வரலாறு காணாத மழை காரணமாக கேரளாவில் ரூ.26 ஆயிரம் கோடியே 718 லட்சத்திற்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக ஐ.நா. சபை ஏஜென்சிகள் கணக்கு எடுத்து உள்ளன. கேரள மறு சீரமைப்புக்கு ரூ.31 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பின் போது மத்திய அரசு கேரள மீட்பு பணிக்கு விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களை வழங்கியது. இந்த செலவுக்காக ரூ.290 கோடியே 74 லட்சத்தை வழங்க வேண்டுமென மத்திய அரசு நம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மீட்புப்பணியின் போது 56 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம், கோவை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தூரத்தை பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 1 மணி நேரம் ஹெலிகாப்டர் பறக்க ரூ.3 லட்சம் செலவாகிறது. பெரிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்கு இதை விட கூடுதல் கட்டணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!