ஆறு லட்சத்துடன் சாலையில் ஓடிய கொள்ளையன்: – துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளைச் சம்பவம்

சென்னையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளைச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு இந்திரா நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தார். அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பணத்தைப் பறித்த நபரைப் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். அவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு சாலையில் ஓடினான். அப்போது, வாடிக்கையாளர்களும் வங்கி ஊழியர்களும் திருடன் திருடன் என்று அந்த நபரை விரட்டினர். இதை, போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், துணிச்சலாகக் கொள்ளையனை மடக்கிப்பிடித்தார். அதற்குள், பொது மக்களும் அங்கு திரண்டனர். கொள்ளையனிடமிருந்த இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிறகு,அவன் கொள்ளன்டித்த பணத்தையும் போலீஸார் மீட்டனர். இதற்கிடையில் அங்கு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனை சரமாரியாகத் தாக்கினர். இதில், கொள்ளையன் காயமடைந்தான்.

பொது மக்களிடமிருந்து கொள்ளையனை மீட்ட போலீஸார், அவனை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். இந்தச் சம்பவம்குறித்து அடையாறு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

போக்குவரத்து போலீஸாரின் துணிச்சலால், உடனடியாக 6 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொள்ளையடித்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனிப் யாதவ் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!