ஆவடியில் கணவன்-மனைவி கொலை: ஆந்திர தம்பதி தப்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு

ஆவடியில் கணவன், மனைவியை கொன்று கொள்ளையடித்து சென்ற ஆந்திர தம்பதி ரெயில் மூலம் தப்பித்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. #AvadiMurder

ஆவடியில் கணவன்-மனைவி கொலை: ஆந்திர தம்பதி தப்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவு
திருநின்றவூர்:

ஆவடி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 65). இவரது மனைவி விலாசினி (58). இருவரும் அரசு அச்சுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தனியாக பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த 27-ந்தேதி காலை வீட்டில் உள்ள அறையில் ஜெகதீசனும், அவரது மனைவி விலாசினியும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அவர்கள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த தம்பதி சுரேஷ், அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் தங்களது மகனுடன் தலைமறைவாகி இருந்தனர்.

ஜெகதீசன் வீட்டில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆந்திர தம்பதி தப்பி ஓடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கொலையாளிகளை பிடிக்க அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஆந்திரா சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கொலையாளி சுரேஷ் மீது கொலை, கொள்ளை, போலீஸ்காரரை வெட்டிய வழக்கு உள்ளிட்ட 22 வழக்குகள் இருப்பது தெரிந்தது. ஆந்திராவில் தலைமறைவு குற்றவாளியான அவன் அங்கிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் தப்பி வந்து கிடைத்த வேலை செய்தான்.

பின்னர் ஜெகதீசன் வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். வீட்டில் நகை-பணம் இருப்பதை அறிந்து ஜெகதீசன், விலாசினியை கொன்று தப்பி விட்டான்.

இதையடுத்து தலைமறைவான ஆந்திர தம்பதி குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். இதேபோல் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவர்களது புகைப்படம் அனுப்பப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு நெல்லூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கொலையாளிகள் சுரேஷ்-பூவலட்சுமி ஆகியோர் மகனுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

கொலையை அரங்கேற்றிய பின்னர் அவர்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ரெயிலில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கிறார்கள்.

இந்த காட்சி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதில் சுரேஷ் மகனை கையில் பிடித்தபடி அழைத்து செல்கிறான். உடன் செல்லும் அவனது மனைவி பூவலட்சுமி பெரிய மூட்டையை தூக்கியபடி செல்கிறார்.

கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் பற்றிய விபரத்தை 94448 03562, 94981 06608 ஆகிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று அறிவித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!