ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மீண்டும் போராட்டம் தீவிரம் – போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையொட்டி ஏராளமான போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனைகளுக்கு பிறகே மனு கொடுக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவையினர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி ஒப்பாரி வைத்து அழுதபடி போராட்டம் நடத்தினர். பின்னர் அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மேல்நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரிராகவன், மகேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்துகிறோம். அனைத்து கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும்.போலீசார் கருப்புக்கொடி போராட்டத்துக்கு எங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்யப்போவதாக முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இதனால் இறுதியாக உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேல்முறையீடு செய்வதால், தற்போது தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளவைகளை கடைபிடிக்கப்போவது இல்லை. மேலும் போராட்டத்துக்கு மாணவர்கள், பொதுமக்களை யாரும் தூண்டிவிடக்கூடாது. சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூரில் இருந்து யாராவது ஸ்டெர்லைட் சுற்று வட்டார கிராமங்களுக்கு வருகிறார்களா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!