“என் பணியில் திருப்தி உண்டா? இல்லையா? என்பதை மக்களே சொல்லட்டும்” – நரேந்திர மோதி பேட்டி.

JAPAN-INDIA/
பிரதமர் நரேந்திர மோதி செய்தி நிறுவனம் ஏ.என்.ஐக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான கேள்விகள் முதல் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்திருக்கிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோதியுடன் நேர்காணல் கண்டார். இந்த பேட்டியை ஏஎன்ஐ நிறுவனம் இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது தொடர்பான அவசரச் சட்டம் பற்றி பிரதமரிடம் கேட்டதற்கு, “சட்டபூர்வமான நடைமுறைகள் முடிந்த பிறகு மட்டுமே அதைப் பற்றி சிந்திக்க முடியும்” என்று பதிலளித்தார். 2019 பொதுத்தேர்தலில் மோதிக்கு எதிராக யார் என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், ”இது மக்களுக்கும் எதிர்க்கட்சியின் மகாகூட்டணிக்கும் இடையேயான போட்டி” என்றார். மக்களின் அன்பும், ஆசிர்வாதமும் தனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

“மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான். உண்மையில் 6-7 மாதங்களாகவே அவர் பதவி விலக விரும்புவதாக என்னிடம் தொடர்ந்து கூறிவந்தார். ராஜிநாமாவை எழுத்துப்பூர்வமாகவே என்னிடம் கொடுத்தார். உர்ஜித் படேல் பதவி விலகியதற்கு காரணம் அரசியல் அழுத்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஆர்.பி.ஐ ஆளுநராக உர்ஜித் படேல் சிறப்பாக பணியாற்றினார்” என்று பிரதமர் தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி பேசிய பிரதமர், “அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓராண்டுக்கு முன்னரே நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். கருப்புப் பணம் இருப்பவர்கள் அதை அறிவித்துவிட்டு, அபராதம் கட்டிவிடுங்கள் என்று அறிவித்திருந்தோம். ஆகவே அதுவொன்றும் அதிர்ச்சிகரமான நடவடிக்கையல்ல”என்றார். பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல் பற்றி பேசிய பிரதமர், “ஒரே சண்டையில் பாகிஸ்தான் திருந்திவிடும் என்று நினைப்பது தவறு. பாகிஸ்தான் திருந்துவதற்கு இன்னும் சற்று காலம் ஆகும்” என்று கூறினார்.

2018ஆம் ஆண்டு பா.ஜ.கவுக்கு வெற்றிகரமான ஆண்டுதான் என்று பிரதமர் மோதி தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் இழப்பை சந்தித்துள்ள நிலையில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி என்ற கேள்விக்கு? பதிலளித்த மோதி “5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் பல ஏழைகள் பலனடைந்திருக்கிறார்கள், இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி”. காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தி குடும்பத்தையும் இலக்கு வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “எந்த குடும்பத்திற்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறதோ, அந்த குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளாக நாட்டை நிர்வகித்து வந்தது. அந்த குடும்பம் நிதி முறைகேடுகளில் பிணை விடுதலையில் இருப்பது மிகப் பெரிய விஷயம்” கூறினார்.

“அரசுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்றோ அல்லது நாளையோ நாட்டிற்கு கொண்டுவரப்படுவார்கள். ராஜாங்க ரீதியிலான முயற்சிகள், சட்ட முறைகள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வது என அவர்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் பணத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு காசையும் பாக்கியில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

“நடுத்தர வர்க்கத்தினர் பற்றிய நமது சிந்தனைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நடுத்தர வர்க்கத்தினர் யாருடைய கருணையிலும் வாழவில்லை. அவர்கள் மரியாதையுடன் வாழ்கிறார்கள் என்பதோடு நாடு செயல்படுவதற்கு மகத்தான பங்களிப்பை நல்குகிறார்கள்” என்கிறார் மோதி. “விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டோம்’ என்று சொல்வது போல அவர்கள் சொல்வது பொய்யானது, தவறாக வழிநடத்தும் செய்தி. இது மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுப் போன்றது. உண்மையில் அதுபோல் எதுவுமே நடக்கவில்லை. அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையே பார்த்தால் நான் சொல்வது புரியும். மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது”

முத்தலாக் மற்றும் சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் மாறுபட்ட நிலைப்பாடு ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் விளக்கமாக பதிலளித்தார். “முத்தலாக் விவகாரத்தையும், சபரிமலை ஆலயத்திற்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது ஆகியவை முற்றிலும் இருவேறு அம்சங்கள். முதலில் முத்தலாக் என்பது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்படுவதில்லை. பாகிஸ்தான் உட்பட பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் விவாகரத்து முறை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, முத்தலாக் என்பது மதம் அல்லது நம்பிக்கை தொடர்பானது அல்ல, இது பாலின சமத்துவம் தொடர்பானது; சமூக நீதிக்கான ஒரு பிரச்சனை.

ஆனால் சபரிமலை ஆலயத்தில் பெண்கள் செல்வதற்கு அனுமதிப்பது என்பது மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பல புனிதத் தலங்களில் மத நம்பிக்கையின் படி ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லையோ, அதே போன்றதுதான் இதுவும். அதுமட்டுமல்ல, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்ற அமர்வில், பெண் நீதிபதி சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை படித்து பார்க்கவேண்டும்” என்றார். நரேந்திர மோதி – அமித் ஷா தலைமைக்கு சவால்விடும் பாஜகவின் சிறு பங்காளிகள் சிவசேனா போன்ற கட்சிகளுடனான பாஜகவின் கூட்டணி உறவு பற்றிய கேள்விக்கு பதிலளித்த நரேந்திர மோதி, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து முன்னேறவும், அவற்றை முன்னேற்றவும் தமது கட்சி விரும்புவதாக தெரிவித்தார்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாட்டும் குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய பிரதமர், “இந்த குற்றச்சாட்டு தனிப்பட்டவர்கள் மீதானது அல்ல, அரசுக்கு எதிரானது என்பதால், இதற்கான பதிலை நாடாளுமன்றத்திலேயே அளித்துவிட்டேன்” என்று தெரிவித்தார். அண்மையில் நடந்து முடிந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேச தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வி பற்றிய கேள்விக்கு பதிலளித்த நரேந்திர மோதி, சத்தீஸ்கரில் தோல்வியடைந்தோம், அது 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வு; ஆனால் மற்ற இரு மாநிலங்களிலும் பெரும்பான்மை பலத்தை பெறமுடியவில்லை என்பதை தோல்வியாக சொல்லமுடியாது என்று குறிப்பிட்டார்.

சரக்கு மற்றும் சேவை வரியைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், மத்திய-மாநில அரசுகள் இணைந்து எடுத்த கூட்டு முடிவு இது. முதலில் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்பட்டு வந்த வரிகள், தற்போது ஒரே இடத்தில் வசூலிக்கப்படுவது, வரி நடைமுறையை எளிமையாக்கியிருக்கிறது என்றார். ஆனால், சிறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டியால் அசெளகரியம் ஏற்பட்டிருப்பது அரசுக்கும் தெரியும். ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். தனது பதவிக்காலத்தை பற்றி பேசிய பிரதமர், ‘என்னுடைய பணியில் திருப்தி இருக்கிறதா இல்லையா என்பதை மக்களே முடிவு செய்யட்டும் என்றார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்கு பிறகும் டோக்லாம் விவகாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருப்பது பற்றி பேசிய பிரதமர் மோதி, டோக்லாம் விசயத்தில் இந்தியா கொடுத்த பதிலின் அடிப்படையிலேயே இந்தியா மதிப்பிடப்படவேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆனால், அண்டை நாடுகளுடன் சுமூக உறவு இருக்கவேண்டும் என்றுதான் இந்தியா எப்போதும் விரும்புகிறது என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!