பைரசி இணையதளங்களுக்கு புதிய கட்டுப்பாடு – 3 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதத்துடன் மசோதா தயார்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை பைரசி எனப்படும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுவது வழக்கமாக நடந்து வரும் ஒன்று. இத்தகைய பைரசி இணையதளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரி வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், இணையதளங்களில் புதுப் படங்கள் வெளியாவது மட்டும் நின்றபாடில்லை. தொடர்ந்து புதிய படங்கள் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதை தடுக்க திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவு, அபராதம் விதிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!