சிந்து சமவெளி காலத்து கல்லறைகளில் ஜோடி எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.

சிந்து சமவெளி நகரத்தில் இரு அரிதான எலும்புக்கூடுகளைஇந்தியா மற்றும் தென் கொரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 2016ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர் – தற்போது ஹரியானாவில் உள்ள ரகிகர்ஹி என்ற கிராமத்தில் உள்ளது அந்த இடம். கடந்த இரண்டு ஆண்டுகளாக “காலவரிசை” மற்றும் அவர்களின் இறப்பிற்கு பின்னால் இருக்கும் சாத்தியமான காரணங்கள் குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து தற்போது அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச சஞ்சிகை ஒன்றில் வெளியிட்டுள்ளனர். “அந்த ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் எதிரெதிரே நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் ஜோடியாக இருந்தார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும், இருவரும் ஒரே நேரத்தில் இறந்திருக்கக் கூடும். ஆனால், எப்படி இறந்தார்கள் என்பது மர்மமாக உள்ளது” என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவை தலைமை தாங்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசந்த் ஷிண்டே.

சிந்து சமவெளி நாகரிகம் சொல்லும் ஜல்லிக்கட்டின் வரலாறு அவர்கள் அரை மீட்டர் ஆழமான மண் குழியில் புதைக்கப்பட்டுள்ளனர். இறக்கும் போது அந்த ஆணுக்கு சுமார் 38 வயதும், அப்பெண்ணிற்கு சுமார் 35 வயதும் இருக்கும். இருவரும் நல்ல உயரமாக இருந்துள்ளனர். அந்த ஆண் 5.8 அடி மற்றும் அப்பெண் 5.6 அடி உயரமும் இருந்திருப்பார்கள். அதே போல அவர்கள் இறக்கும்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்துள்ளனர்.

இது மிக அரிதான “கூட்டுக் கல்லறை” என்று கூறும் தொல்பொருள் ஆராச்சியாளர்கள், “அக்காலத்தில் நடந்த சில குறிப்பான இறுதி சடங்குகளின் பொதுவான வெளிப்பாடு இதில் இல்லை” என்று கூறுகின்றனர். ஆண், பெண் இருவருமே ஒரு நேரத்தில் இறந்திருக்கக் கூடும், அதனால் ஒரே கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

இது போன்ற பழங்கால கூட்டுக் கல்லறைகள் எப்போதும் ஆர்வத்தை எழுப்பியுள்ளன. இத்தாலியில் உள்ள நியோலிதிக் கல்லறை தளத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தழுவிக் கொண்டிருப்பது போன்ற எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்யாவில் ஒரு ஜோடி எதிரெதிரே கைகளை பிடித்தவாறு கல்லறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதே போன்று கிரேக்கத்தில் 6000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் ஒன்றோடு ஒன்று தழுவி இருந்தவாறு கண்டுபிடிக்கப்பட்டது.

ரகிகர்ஹி கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றவை எல்லாம் அக்காலத்தில் பொதுவாக பயன்படுத்தப்பட்டதுதான். சில மண் பாண்டங்கள் மற்றும் சில கல் வைத்த நகைகளும் பொதுவாக சிந்து சமவெளி கல்லறைகளில் பார்க்க முடியும். “சிந்து சமவெளி கல்லறைகளை பார்க்கும்போது தெரியவரும் முக்கிய விஷயம் அவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் என்பது. மேற்காசிய அரசர்கள் போல பிரம்மாண்டமான இறுதிசடங்குகள் எல்லாம் இருக்கவில்லை” என்கிறார் Early Indians: The Story of Our Ancestors and Where We Came From என்ற புத்தகத்தின் ஆசிரியர் டோனி ஜோசஃப்.

சிந்து சமவெளி நகரங்களில் உள்ள கல்லறைகளில் பொதுவாக உணவு மற்றும் சில நகைகள் கொண்ட பானைகள் இருக்கும். இறப்பிற்கு பிறகு வாழ்க்கை இருப்பதாக நம்பிய அவர்கள் அவற்றை கல்லறைக்கு காணிக்கையாக செலுத்தினார்கள். “மேற்காசியாவில் நடந்த பெரும் சடங்குகள் போல இங்கு இருந்ததாக சிறு அளவுகூட தெரியவில்லை” என்றும் டோனி ஜோசஃப் கூறுகிறார்.

இந்த “மர்ம ஜோடி” 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்த இடத்தில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி தளங்களில் ரகிகர்ஹி தான் மிகப் பெரியதாகும்.

சிந்து சமவெளி கல்லறையில் இவ்வாறான ஜோடியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பது இது முதன்முறையல்ல. ரகிகர்ஹி உள்ள ஒரு இடுகாட்டில் 70 கல்லறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க, அதில் 40 கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த “மர்ம ஜோடியின்” கல்லறை வெகுவான கவனத்தை பெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!