இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய மோசடி! – விசாரணைகளைத் தொடங்கியது பாதுகாப்பு அமைச்சு

கொழும்பில் இராணுவத் தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து உயர்மட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இராணுத் தலைமையகம் அமைந்துள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவுக்கு வெளிநாடொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டு அப்பணத்தை உரிய முறையில் திறைசேரியில் வைப்பிலிடப்படவில்லையென்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இராணுவத் தலைமையகம், இராணுவ வைத்தியசாலை என்பன இயங்கி வந்த கொழும்பு காலி முகத்திடல் முன்பாக உள்ள காணியில் 10 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பகுதி கடந்த காலத்தில் ஹோட்டல் கட்டடத் தொகுதியொன்றை அமைப்பதற்காக வெளிநாடொன்றுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாவிற்கு விற்று அப்பணத்தை திறைசேரியில் வைப்பிலிடாமல் வேறு வழியில் பயன்படுத்தப்பட்டு பெரும் ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உயர்மட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், உயர் மட்ட விசாரணையொன்றின் மூலம் நிதி மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ அல்லது மற்றொரு விசாரணைப் பிரிவிற்கோ மேலதிக விசாரணைக்காக இவ்விடயம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆரம்ப விசாரணைகளின் மூலம் இந்தக்காணி ஆயிரக்கணக்கான கோடி ரூபாவிற்கு விற்று அந்தப் பணத்தை திறைசேரியில் வைப்பிலிடாமல் பாதுகாப்பு அமைச்சு கணக்கொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசுக்கு சொந்தமான காணியொன்று விற்பனை செய்யுமிடத்து அந்தப் பணத்தை திறைசேரிக்கு அன்றி வேறு எந்த கணக்கிற்கும் சேர்க்க முடியாது. திறைசேரியிலிருந்து தேவைக்கு ஏற்ப அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்கும் ஆனால் அப்பணத்தில் இதுவரையில் ஒரு சதம் கூட திறைசேரிக்கு வைப்பிலிடப்பட்டதாக தெரியவில்லை.

வைப்பபிலிடப்பட்டுள்ள இப்பணம் பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளின் கீழ் இயங்கும் ஒரு கணக்கிலாகும். அதன் செலவு அறிக்கை கூட பாதுகாப்பு அமைச்சின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமையகமான அக்குறேகொடவில் நிர்மாணிக்கப்படும் பாரிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு இதுவரையில் 5000 கோடி ரூபா செலவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிர்மாணத்திற்கு முப்படைகளின் ஊழியர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5000 கோடி ரூபா செலவிடப்பட்ட போதிலும் முப்படைத் தளங்களிலிருந்து ஓய்வுபெற்ற அல்லது வெளியேறிய படைத் தரப்பினர் வாடகை வீடுகளிலேயே தங்கியிருக்கின்றனர். அந்த வாடகை கட்டடங்களுக்கு மாதாந்தம் இலட்சக் கணக்கில் செலவிடப்படுகின்றது.

இந்த நிர்மாணம் தொடர்பாக அவதானிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்து நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் இராணுவத் தலைமையகம் மற்றும் அலுவலங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அமைப்பதற்கும் ஜனவரி மாதம் முதல் பணிகளை தொடர்வதற்கும் பாதுகாப்பு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தை இந்த இடத்திற்கு இடம்பெயரச் செய்வதற்காக மிகப் பழைமை வாய்ந்த இராணுவத் தலைமையகக் காணியை விற்பனை செய்தமை தொடர்பில் அப்போது பதவியில் இருந்த இராணுவ தலைமை அதிகாரியான தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பல உயரதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த காணி விற்பனையில் பெரும் ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை அடுத்தே இது குறித்து முழு அளவிலான விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!