இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் விமர்சனம் – “எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது”

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் கடந்த 8-ந் தேதி தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் கூறியிருப்பதாவது, பாஜக அரசின் கூற்றுப்படி இந்திய மக்கள் தொகையில் 95 சதவீதம், அதாவது 125 கோடி, ஏழைகளாம்! மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு!

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!