சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது.

அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சிசன், இந்த ரோந்துப் படகுகளை சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர். ருவான் விஜேவர்த்தன, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க ஆகியோரிடம் முறைப்படி மூன்று படகுகளையும் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி, உள்ளிட்ட படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்ரேலியா கடந்த 2014ஆம் ஆண்டு 38 மீற்றர் நீளம் கொண்ட, பே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தது.

தற்போது கடலோரக் காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ள, 3 படகுகளும் சிறிய வகையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!